செய்திகள்நம்மஊர்

மாணவி இழப்பைவிட காவலர் விசாரணையால் பெற்றோர் வேதனை: அண்ணாமலை குற்றச்சாட்டு | Parents tormented by police investigation rather than student loss: Annamalai charge

அரியலூர் : மாணவி இழப்பை விட காவலர்களின் விசாரணையே பெற்றோர்களின் மனதை வேதனைப்படுத்தி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி, அண்மையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோர் ஆறுதல் கூறி, பாஜக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மாணவியின் பெற்றோரிடம் இன்று (ஜன 30) வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:

“மாணவியின் மரணத்தை விட போலீஸார் விசாரணையே மாணவியின் பெற்றோர்களுக்கு மனக்கஷ்டத்தை அளித்து வருகிறது. ஆளும் கட்சியினர் மற்றும் காவல்துறையினர், இவர்கள் தான் குற்றவாளிகள் என முடிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

பாரதிய ஜனதாவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். அதனால் குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் கொண்ட கட்சி பாஜக என்பது தவறு. எனவே, மாணவியின் மரணத்தில் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற சிபிஐக்கு

உத்தரவிட வேண்டும். அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீட்டை வைத்து திமுக அரசியல் செய்தது. ஆனால், அதற்கான அவசியம் பாஜகவிற்கு இல்லை.

யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை பாஜக எதிர்க்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சினை. தமிழகத்தில் காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட திமுக அரசு அனுமதிக்க வேண்டும்.

புதுக்கோட்டையில், ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கணேஷ்பாபு கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மதமாற்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், 10 நாட்களுக்கு பிறகு இருசக்கர வாகனம் காணவில்லை, செல்போன் காணவில்லை என பொய்யான வழக்கை பதிவை செய்து கனேஷ்பாபு கைது செய்யப்பட்டுள்ளார்” என அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *