செய்திகள்நம்மஊர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தலைவர்கள், அதிகாரிகள், திரை பிரபலங்கள் வாக்களிப்பு | Urban local elections: Leaders, officials, celebrities vote

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்காளர்கள் கரோனா கட்டுப்பாட்டை பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் ஆணையர் பழனிகுமார்: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பத்மஷேசாத்ரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வாக்களித்தார்.

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வாக்களிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி வேலூர் மாநகராட்சி தேர்தலில் காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்.

நடிகர் விஜய்: காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்களித்த அதிகாரிகள்: சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பிரபாகர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் வாக்களித்தனர்.

அமைச்சர்கள் வாக்களிப்பு: திருச்சி தில்லைநகரில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.என்.நேரு, கிராப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் அன்பில் மகேஷ், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *