ஹிஜாப் அணிவதற்கு தடை – கோவையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த தீர்ப்பினை எதிர்த்து மாணவிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி முன்பாக இன்று மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குரானில் ஹிஜாப் அணியவேண்டும் என்று சொல்லி இருக்கின்றது எனவும், ஆனால் தீர்ப்பில் அப்படி எதுவும் இல்லை என சொல்லி இருப்பதாகவும், சங் பரிவார் அமைப்பினர் மட்டுமே ஹிஜாப் அணிவதை எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் ஹிஜாப் தொடர்பாக நிர்வாகம் எதுவும் சொல்லவில்லை எனவும் , இங்கு தடை விதித்தால் இன்னும் வீரியமாக போராடுவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரி வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.