“பாஜகவில் சசிகலா இணைய வரவேற்கிறோம்” – நயினார் நாகேந்திரன் | We will welcome Sasikala to the BJP
புதுக்கோட்டை: “பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம்” என பாஜக தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “தமிழக முதல்வர் கேட்டதற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 2 முறை குறைத்துள்ளது. அதே விகிதாச்சாரப்படி மாநில அரசும் விலையை குறைக்க வேண்டும்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிட வேண்டாம் என்று சட்டப்பேரவையில் பேசிய பிறகும்கூட மாற்றிக்கொள்ளவில்லை. திமுக அரசு தன்னை பெருமைப் படுத்திக்கொள்கிறதே தவிர, மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை.
மத்திய அரசு தேவையான நேரங்களில் கொடுக்க வேண்டிய நிதியை மாநிலங்களுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதைத் தரவில்லை என்று குற்றம் சாட்டுவதே திமுக அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
மத்திய அரசிடம் தமிழக முதல்வர் ஒரு தொகையை கேட்கிறார். நிதியமைச்சர் ஒரு தொகையை கேட்கிறார். இவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு உள்ளது.
தமிழகத்தில் நிலவும் பாலியல் வன்கொடுமையை தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிகலாவை சேர்த்துவிட்டால் அதிமுக இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அதிமுகவில் அவர் இல்லையென்றால், பாஜகவுக்கு இணைவதற்கு நாங்கள் முன்னெடுப்போம்” என்றார்.