செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் 20 நாட்களுக்குள் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: அமைச்சர் தகவல் | New overhead tank in Pudukottai Venga ivyal village within 20 days: Minister Meiyanathan

புதுக்கோட்டை: “வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் இன்னும் இரண்டொரு தினங்களில் தொடங்கப்படும். அந்தப் பணிகள் 20 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, மீண்டும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்படும்” என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் தீண்டாமை புகார் எழுந்த நிலையில், அந்த கிராமத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று (டிச.29) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வேங்கைவயல் அய்யனார் கோயிலிலில் அனைத்து சமூக மக்களும் ஒன்றுசேர்ந்து சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீண்டாமைப் பிரச்சினையில் மிக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ, புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர், அரசுத் துறை அதிகாரிகள், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அப்போது வேங்கை வயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நடைபெறக்கூடாத, மனிதாபிமானமற்ற, கண்டிக்கத்தக்க செயல் அது. அதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. நிச்சயமாக காவல்துறைக் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.

அந்த இடத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குப் பதிலாக புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் இன்னும் இரண்டொரு தினங்களில் தொடங்கப்படும். அந்தப் பணிகள் 20 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, மீண்டும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க மனிதர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கேற்ப, ஒவ்வொரு மனிதனும், மனிதநேயத்தோடு, மற்றவர்களை மதிக்கக்கூடியவர்களாக மாறினால், இதுபோன்ற நிகழ்வுகள் எங்கேயும் நடைபெறாது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே வேங்கை வயலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில் பார்த்தபோது, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மூலம் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர், குடிநீர் தொட்டி உடனே கழுவி சுத்தம் செய்யப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கைவயலுக்கு நேரில் சென்றனர். அப்போது, இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை இருப்பதாகவும், அங்குள்ள ஐயனார் கோயிலுக்கு தங்களை அனுமதிப்பதில்லை எனவும் வேங்கைவயல் மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வேங்கைவயல் மக்களை ஐயனார் கோயிலுக்கு ஆட்சியர் கவிதா ராமு அழைத்துச் சென்று வழிபடச் செய்தார். மேலும், இப்பகுதியினரை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகத்தினரும் ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *