தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதா? – திமுகவினருக்கு விஜயபாஸ்கர் கேள்வி | Engage on Personal Attacks? – Vijayabaskar’s Question to DMK
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் எந்தப் பணியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ள நிலையில், டெங்கு தடுப்புப் பணிக்கு 30 பேரை மட்டும் நியமிக்கிறார்கள். அவர்கள் எப்படி 42 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணியை சரிவர செய்ய முடியும்?.
அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மகளிர் கல்லூரி முன்பு ரூ.9 கோடியில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. அதேபோன்று, அரசு பல் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. ஆனால் அவற்றை இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் இல்லை.
இதையெல்லாம் மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் பேசி வருகிறேன். ஆனால், ஆளும் கட்சியான திமுகவினர் விராலிமலை தொகுதியில் பொதுக் கூட்டம் நடத்தி, என்னைப் பற்றி தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இவ்வாறு செய்வது சரியா? என்றார்.