சூதாட்ட தடை சட்டப் பிரிவுகள் ரத்து; மேல்முறையீடு செய்வது தொடர்பாக பரிசீலனை: அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல் | Consideration of appeals for annulment of sections of the Gambling Prohibition Act
புதுக்கோட்டை: தமிழக அரசின் சூதாட்ட தடை சட்டப் பிரிவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத் துறை பரிசீலிக்கும் என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று ஆளுநர் கூறியிருந்தார். ஆனால், இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
‘ஆன்லைன் சூதாட்டம் ஒழுங்குமுறைப்படுத்துதல் – தடை செய்தல்’ என்பதுதான் அந்த சட்டத்துக்குப் பெயர். இதில், எந்தெந்த விளையாட்டுகளை, எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்கான குழுக்கள் அமைத்து, அவற்றை ஒழுங்குபடுத்தி விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டமாக ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளை அனுமதிக்க முடியாது என்பதுதான்.
இதில், ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளை தடைசெய்ய முடியாது என்றுதான் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து கொள்வதால், அதை தடை செய்ய வேண்டும் என்பது எங்களது கருத்து. நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் எங்கள் தரப்பு வாதத்தை முறையாக முன்வைக்கவில்லையோ என்றுதான் கருத வேண்டியுள்ளது. இந்ததீர்ப்பு குறித்து பரிசீலனை செய்து, பின்னர் மேல்முறையீடு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.