தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு 12 லிட்டர் தாய்ப்பாலை வழங்கி, 5 பச்சிளங் குழந்தைகளின் உயிரை தாய் ருஷினா காத்துள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம் தாய் ருஷினா மர்ஃபாஷியா. இவர் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வியான் என்னும் ஆண் குழந்தைக்குத் தாயானார். குழந்தைக்குத் தேவைப்படுவதைத் தவிர, அதிகப் பால் அவருக்கு சுரந்தது. இதை உணர்ந்த ருஷினா, உயிர்ப்பாலான தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்க முடிவெடுத்தார்.
அருகில் இருந்த மருத்துவமனையில் ஐசியுவில் இருந்த 5 பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்க ஆரம்பித்தார் ருஷினா. தொடர்ந்து 3 மாதங்கள் சுமார் 12 லிட்டர் தாய்ப்பாலை வழங்கி, 5 குழந்தைகளின் உயிரைக் காத்திருக்கிறார் ருஷினா. அக்குழந்தைகளின் நோய்வாய்ப்பட்ட அல்லது தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.
மாம் (mother’s own milk) என்னும் அமைப்பிலும் ருஷினா அங்கம் வகிக்கிறார். இதில் இருக்கும் இளம் தாய்கள் அனைவரும் தாய்ப்பாலை தானமாக அளித்து வருகின்றனர். அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்த அமைப்பில், 250 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் சார்பில் சுமார் 90 லிட்டருக்கும் மேற்பட்ட தாய்ப்பால் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் ஒரு குழந்தையின் உயிர்ப்பால்; ஆகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். பால் சுரக்கும் வரை, தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார மையம்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982