புதுக்கோட்டை தொல்லியல் மாநாட்டில் வியக்க வைத்த திருச்சி இளைஞரின் தொல்பொருள் கண்காட்சி | Archeology exhibition of Trichy youth who surprised Pudukottai Archeology Conference
புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் தேசிய அளவிலான மாநாட்டில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் தொல்பொருள் கண்காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொல்லியல் கழகம் சார்பில் தேசிய அளவிலான தொல்லியல் மாநாடு புதுக்கோட்டையில் அண்மையில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினர். இந்த மாநாட்டில் 30-வது ‘ஆவணம்’ இதழ் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டின் சிறப்பு அம்சமாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி ஆறுமுகம்(37), காட்சிப்படுத்தியிருந்த ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள் அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது.
சங்க காலத்தைச் சேர்ந்த கோட்டை சுவர்களின் செங்கல், எடைக் கல், பழமையான இரும்பு முரசு, தராசு, வேட்டைத் தடி, பீரங்கி குண்டுகள், இரும்பு உருக்குக்கு பயன்படுத்திய மண் குழாய்கள், பண்டைய மக்கள் பயன்படுத்திய மாவுக்கல், மண்பாண்டங்கள், வெளிமாநில பானை ஓடுகள், சங்ககால சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், இரும்பு பூட்டுகள், கல் மணிகள், ஓலைச்சுவடிகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் புகைப்பான்கள், அரண்மனை கூரை ஓடுகள், சில்லாக்குகள், சுடுமண் விளக்குகள், சுடுமண் காதணிகள், கல் மரம், குறியீடுடன்கூடிய முதுமக்கள் தாழி ஓடுகள், சுடுமண் பொம்மைகள், புதிய கற்கால கல் ஆயுதங்கள், நாணயங்கள், சலங்கைகள் என ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களை அவர் காட்சிக்கு வைத்திருந்தார். மேலும், பார்வையாளர்களுக்கும் தனது சேகரிப்புகள் குறித்து விளக்கினார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பெரியசாமி ஆறுமுகம் கூறியது:
2000-ல் 9-ம் வகுப்பு படிக்கும்போதே பழமையான வாழ்விடங்களில் இருந்து ஏராளமான தொல் பொருட்களை சேகரிக்கத் தொடங்கினேன்.
2004-ல் பிளஸ் 2 படிக்கும்போது பள்ளியில் தொல்லியல் கண்காட்சியை நடத்தினேன். இது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவே, எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.
தொடர்ந்து, நூலகங்களுக்குச் சென்று வரலாற்று புத்தகங்களைப் படித்து தொல்லியல் தகவல்களைத் தெரிந்து கொண்டேன். தொல்லியல் அறிஞர்கள் பலரும் உதவினர்.
என்னிடம் உள்ள தொல் பொருட்கள் பெரும்பாலானவை துறையூர் வட்டத்தில் சேகரிக்கப்பட்டவை. ஒரு சில பொருட்கள் மட்டும் திருச்சி பகுதியில் சேகரிக்கப்பட்டவை.
மேலும், கொடுமணல், பொற்பனைக்கோட்டை போன்ற பிற பகுதிகளைச் சேர்ந்த கோட்டை செங்கற்களும் உள்ளன. தமிழகம் முழுவதும் தொல்லியல் அறிஞர்கள் கலந்துகொள்ளும் மாநாடுகள் போன்ற இடங்களில் இதுபோன்று கண்காட்சி நடத்தி வருகிறேன் என்றார்.
இவரது கண்காட்சியைப் பார்வையிட்ட அறிஞர்கள் கூறும்போது, “பெரியசாமி ஆறுமுகம் காட்சிக்கு வைத்திருந்தவற்றில் பல்வேறு அரிய வகை தொல் பொருட்கள் உள்ளன” என்றனர்.