நடப்பாண்டில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக திருச்சி, புதுக்கோட்டையில் இதுவரை தலா ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின்கீழ் சென்னை பெருநகரம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், சிறப்பு புலனாய்வு பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 553 வழக்குகள்
இதன்படி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 2015-16-ல் 785 வழக்குகளும், 2016-17-ல் 801 வழக்குகளும், 2017-18-ல் 800 வழக்குகளும்,2018-19-ல் 514 வழக்குகளும், 2019- 2020-ல் 483 வழக்குகளும், நடப்பாண்டில் இதுவரை 553 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலும் காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கூட்டுறவு, பத்திர பதிவுத்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் சிக்கியுள்ளனர்.
இதில், தெற்கு மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்டங்களில் நடப்பாண்டில் திருவாரூரில் 7, தஞ்சாவூரில் 9, நாகையில் 9, மதுரையில் 10, திண்டுக்கல்லில் 5, தேனியில் 2, சிவகங்கையில் 7, ராமநாதபுரத்தில் 3, விருதுநகரில் 8, திருநெல்வேலியில் 8, தூத்துக்குடியில் 4, கன்னியாகுமரியில் 6, கரூரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் திருச்சி, புதுக்கோட்டையில் தலா ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 மாதங்களாக வழக்கில்லை
திருச்சி மாவட்டத்தில் 2016-ல் 3, 2017-ல் 14, 2018-ல் 4, 2019-ல் 12, 2020-ல் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் சட்ட விரோதமாக மது விற்பனைக்கு அனுமதியளித்து, அதற்காக கையூட்டு பெற்றுக் கொண்டதாக 12.01.2021 அன்று முசிறியிலுள்ள துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆய்வாளர் லதா, உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, தலைமைக் காவலர்கள் சரவணன், நாகமுத்து ஆகியோர் சிக்கிய ஒரு வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. அதற்குப்பின் 8 மாதங்களாகியும் வேறு எந்த வழக்கும் பதிவாகவில்லை.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கியதாக நிலஅளவையர் தங்கதுரை மீது கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘லஞ்சத்தை ஒழிக்க மக்களிடத்தில் இருந்து இன்னும் கூடுதல் ஒத்துழைப்பு தேவை. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குகின்றனர் என பொதுவாகக் குற்றச்சாட்டு வைத்தாலும், குறிப்பிட்டு புகார் தர பலர் முன் வருவதில்லை. எனவே, லஞ்சம் கேட்போர் மீது தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்’’ என்றனர்.
நெருங்குகிறது தீபாவளி வசூல்
தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் அரசுத் துறைகளில் பணிபுரியும் சிலர், தொழில் நிறுவனங்கள், வணிகர்களிடமும், அரசு அலுவலகங்களுக்கு பணி நிமிர்த்தமாக வரக்கூடிய பொதுமக்களிடமும் நன்கொடை, அன்பளிப்பு என்ற பெயரில் கட்டாய வசூலில் ஈடுபடுவது வழக்கம். ஏற்கெனவே கரோனா ஊரடங்கு உத்தரவால் அனை்த்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தீபாவளி பண்டிகைக்காக அரசு ஊழியர்கள் கட்டாய வசூல் அல்லது லஞ்சம் வாங்குவதைக் கட்டுப்படுத்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் இப்போதிலிருந்தே கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.
புகாருக்கான தொலைபேசி எண்கள்
போலீஸார் மேலும் கூறும்போது, பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க விரும்பாவிட்டாலும்கூட, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்த நாளில், இந்த அலுவலரிடம் இவ்வளவு ரூபாயை லஞ்சமாகக் கொடுக்கப் போகிறோம் என்ற விவரத்தை தெரிவித்தால்கூட போதும். திருச்சி 0431-2420166, கரூர் 04324 – 225100, புதுக்கோட்டை 04322 – 222355, தஞ்சாவூர் 04362 – 227100, நாகப்பட்டினம் 04365 – 248460, திருவாரூர் 04366-226970 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். போலீஸில் தகவல் தெரிவித்தால் நீதிமன்றத்துக்கெல்லாம் அலைய வேண்டும் என நினைக்க வேண்டாம். அனைத்து வழக்குகளிலும் அதற்கான அவசியம் ஏற்படுவதில்லை. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றனர்.






























