தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடல்: அமைச்சர் மெய்யநாதன் தகவல் | Closure of 172 companies producing banned plastic products
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யதான் ஆகியோர் இன்று (ஜூன் 3) தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, செய்தியார்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில்தான் ‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் தூய்மையாக பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றப்படும்.
பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ரூ.105 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1,172 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 143 இடங்களில் குப்பைகள் பெரியளவில் தேங்கி இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில், பயோ மைனிங் முறையில் 59 இடங்களில் முற்றிலுமாக குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்களில் விரைவில் அகற்றப்படும். குப்பை கிடங்குகளை தரமானதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பைகள் சேகரிக்கும் இடத்திலேயே பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து எடுக்கப்படும்.
காய்கறி உள்ளிட்ட மற்ற பொருட்களைக் கொண்டு மின்சாரம் உரம் தயாரிக்க கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் முறையாக கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ரூ.25 கோடியில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காய்கனி கழிவுகளில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டதால் பல்வேறு இடங்களில் குடிசைத் தொழிலாக பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய இடங்களில் பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் இயந்திரங்களைகூட வெளியே எடுக்க முடியாத அளவுக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பிளாஸ்டிக் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனதில் ஏற்படும் மாற்றத்தின் மூலமாக தான் முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த போட்டி நடைபெறுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதிக்குள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காண அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடையும்”என்றார்.