செய்திகள்நம்மஊர்

மதுக்கரை டு மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரம் – கோவை மேற்கு புறவழிச்சாலை முதல்கட்ட திட்டப்பணி தொடக்கம் | Coimbatore Western Expressway First Phase Project Commencement

Coimbatore Western Expressway First Phase Project Commencement

கோவை: கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேற்கு சுற்று வட்டச்சாலை எனப்படும் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த 14.11.2011 அன்று நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணி சேலம் – கொச்சின் சாலையில், மதுக்கரையில் உள்ள மைல்கல் பகுதியில் தொடங்கி கோவை – குண்டல்பெட் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடையும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுக்கரையில் தொடங்கி சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்க நாயக்கன்பாளையம், சோமையன்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடையும் வகையில் மொத்தம் 32.43 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.320 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இத்திட்டப்பணியை மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்கட்டப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்ட திட்டப்பணிக்காக சாலை அமைக்க கடந்தாண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முதல் கட்ட திட்டப்பணியை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அதன் விவரம் ஒப்பந்தப்புள்ளி ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பின்னரும் திட்டப்பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து வலியுறுத்தல்: மாநகரில் சீரான போக்குவரத்துக்காக மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என “இந்து தமிழ் திசை” சார்பில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன. மேலும், ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும் திட்டப்பணி தொடங்குவதில் உள்ள தாமதம் தொடர்பாக மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணியை விரைவாக தொடங்க வலியுறுத்தி, ‘கோவையில் தாமதமாகும் மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணி’ என்ற தலைப்பில் கடந்த 21-07-2023 அன்று “இந்து தமிழ் திசை”யின் சிறப்புப் பக்கத்தில் சிறப்புச் செய்தியும் வெளியானது.

இச்செய்தியின் எதிரொலியாக, மேற்கு புறவழிச்சாலை முதல் கட்ட திட்டப்பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கோவை மதுக்கரையில் நேற்று (ஆக.11) தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 கட்டங்களாக பணிகள்: இத்திட்டப்பணி குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மேற்கு புறவழிச்சாலை முதல் கட்ட திட்டப்பணி மதுக்கரையில் தொடங்கி, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திப்பாளையம், மாதம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக 11.80 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்படுகின்றன. 2-ம் கட்ட திட்டப்பணி மாதம்பட்டியில் தொடங்கி பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக 12.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்படுகின்றன.

3-ம் கட்டமாக கணுவாயில் தொடங்கி பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக 8.52 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியின் மொத்த மதிப்பீடு ரூ.650 கோடி ஆகும். முதல் கட்ட சாலைப் பணிகளுக்காக ரூ.206.53 கோடிக்கு இத்திட்டப்பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்திட்டத்தில் 30 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்கப்படும். ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *