திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் | போட்டியாளர்களை சமரசப்படுத்த கட்சி தலைமை தீவிர முயற்சி: நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் அறிவாலயத்தில் பரபரப்பு | DMK District Secretary Election
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியினர் அளித்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தொடங்கியது.மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நிர்வாகி ஒருவர் அறிவாலயத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் அமைப்பு ரீதியிலான 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டமாக 72 மாவட்டச் செயலாளர்கள், அவைத் தலைவர் உள்ளிட்ட 12 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான மனு தாக்கல் கடந்த செப்.22-ல் தொடங்கி, 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தொடங்கியது. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
ஏற்கெனவே, தேர்தல் இல்லாமல் மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், போட்டி வேட்பாளர்களை அழைத்து மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையுடன், இந்த பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் அமைச்சர் எஸ்.ரகுபதியை எதிர்த்து, அமைச்சர் மெய்யநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரை அழைத்து, ரகுபதி சீனியர் என்பதால் எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மனு அளித்துள்ள செல்லதுரை, சென்னை மேற்கு மாவட்டத்துக்கு போட்டியிடும் சிற்றரசு, அவரை எதிர்த்து போட்டியிடும் மதன் மோகன், அன்புதுரை, அகஸ்டின் பாபு ஆகியோர் நேற்று அறிவாலயத்துக்கு வந்திருந்தனர். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம் மற்றும் அவரை எதிர்த்து மனு அளித்துள்ள கே.பி.சங்கர் ஆகியோரும் வந்திருந்தனர். போட்டியாளர்களை மனுக்களை வாபஸ் பெறச் செய்து, தேர்தலை சுமூகமாக முடிக்க திட்டமிட்டு பணிகளை திமுக மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 35-வது வட்ட முன்னாள் பொருளாளர் அமுல்ராஜ் அறிவாலயம் வந்தார். திடீரென தான் எடுத்து வந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டுச்சென்றனர். தனக்கு மீண்டும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், இதுபோன்ற நடவடிக்கையில் அமுல்ராஜ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.