டிரெண்டிங்மீம்ஸ்

காணொலிக் காட்சி மூலம் நேர்காணல்: திருச்சி திமுக இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமித்த உதயநிதி ஸ்டாலின் | Interview with video footage

திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணிக்குக் காணொலிக் காட்சி மூலம் நேர்காணல் நடத்தி, புதிய நிர்வாகிகளை உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுகவினர் கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளையில், வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த, காலியாக உள்ள பதவிகள் நிரப்பப்படுவதுடன், பல்வேறு அணிகளுக்குப் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணிக்குப் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான நேர்காணல் காணொலிக் காட்சி மூலம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களிடம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்.

அதனடிப்படையில் புதிய நிர்வாகிகளை பட்டியல் தயாரித்து நேற்று முன்தினம் அதனை வெளியிட்டுள்ளார். இதன்படி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளராக ஏ.வெங்கடேஷ்குமார், துணை அமைப்பாளர்களாக எஸ்.பாலமுருகன், ப.விஷ்ணுவர்தன், பி.ரவீந்திரன், எம்.தேசிங்குராஜன், ஜி சத்திபிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அமைப்பாளர்களாக பி.வடிவேல் (மணப்பாறை), சோ.கார்த்திகன் (மருங்காபுரி வடக்கு), ஆர்.முருகன் (மருங்காபுரி தெற்கு), ஜெ.கார்த்திக் (திருவெறும்பூர் வடக்கு), எம்.செல்லத்துரை (திருவெறும்பூர் தெற்கு), பெர்னாட் சாமிநாதன் (வையம்பட்டி) ஆகியோரும், நகர அமைப்பாளர்களாக எஸ்.பி ஆனந்த் (மணப்பாறை), எஸ்.செல்வம் (துவாக்குடி), பகுதி அமைப்பாளர்களாக ச.ஜோதிபாசு (காட்டூர்), கா.கார்த்திகேயன் (கலைஞர் நகர்), வி.கே.கோபிநாத் (மலைக்கோட்டை), ஐ.பத்மநாபன் (பாலக்கரை), பா.பிரபாகரன் (பொன்மலை), பேரூர் அமைப்பாளர்களாக எஸ்.தமிழ்ச்செல்வன் (கூத்தைப்பார்), ஏ.ராஜாமுகமது (துவரங்குறிச்சி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, “திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பிறகு, இளைஞர்களிடம் எழுச்சியும் வரவேற்பும் அதிகரித்துள்ளது. இளைஞரணியில் சேரக்கூடியவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைப்பது உறுதி.

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் கட்டுப்பாட்டிலுள்ள திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறுவதற்கான பணிகள் தற்போது வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் திமுக இளைஞரணிக்குப் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளது, எங்கள் செயல்பாட்டின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தும்” என்றார்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *