முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | Ex-minister Vijayabaskar’s case: HC orders IT department to respond
சென்னை: 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வரிபாக்கியை வசூலிப்பதற்காக தனக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தை முடக்கியும், வங்கிக் கணக்கை முடக்கியும் வருமானவரி துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ஆம் ஆண்டு முதல் 2018-19 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், “வருமான வரித்துறை முடக்கிவைத்துள்ள இந்த வங்கி கணக்குகளில்தான் எம்எல்ஏவுக்கான சம்பளம் மற்றும் அரசு நிதிகளையும் பெறுகிறேன். அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.