ஆன்லைன் தடை சட்ட அனுமதியில் ஆளுநர் அரசியல் செய்கிறார்: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு | Governor does politics
வேலூர்/புதுக்கோட்டை: வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார். அந்த விளக்கத்தை திருப்பி அனுப்பியுள்ளோம்.இனி முடிவு செய்ய வேண்டியவர் அவர்தான். அவரது முடிவைப் பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். இந்த விஷயத்தில் ஆளுநர் தாராளமாக அரசியலை மட்டும்தான் செய்கிறார்” என்றார்.
அமைச்சர் ரகுபதி கருத்து: இதுதொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வது ஆளுநருக்கே வெளிச்சம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். தடை சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக இப்போது அமலில் உள்ள குற்றச் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடர்வோம்.
இந்தத் தடைச் சட்டத்துக்கு எதிராக ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை. ஏனெனில், குறை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை அந்தச் சட்டத்தில் நாங்கள் தரவில்லை. ஒப்புதல் அளிக்காதது குறித்து ஆளுநரைக் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை. அவர் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டிய உரிமைதான் எங்களிடம் உள்ளது என்றார்.