முதல் பெண் பத்திரிக்கை புகைப்படக்கலைஞர்
இந்தியாவில் முதன் பெண் பத்திரிக்கை புகைப்படக்கலைஞர், ஹோமாய் வயரவாலா.
சில பணிகள் ஆண்களுக்குத்தான் ஏற்றவை என்று சமூகம் அழுத்தமாகக் கருதிக்கொண்டிருந்தபோது, அப்படியொரு வேலையான பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் பணியில் இறங்கி கலக்கியவர் ஹோமாய்.
குஜராத் மாநிலம் நவ் சாரியில் பிறந்த ஹோமாய், ஒரு நடுத்தர பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்
மும்பை ஜே. ஜே. கலைக் கல்லூரியில் படித்த அவர், புகைப்படக்கலை ஆர்வம் கொண்டார் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஊழியரான மானெக்ஷாவிடம் புகைப்படைக் கலை நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். அந்த மானெக்ஷாவைத்தான் பிற்பாடு மணந்து கொண்டார்.
இரண்டாம் உலகப் போர் துவக்கத்தில், புகைப்படம் எடுப்பதை வேலையாகச் செய்ய ஆரம்பித்தார் ஹோமாய். அவர் இல்லஸ்டிரேடட்வீக்லி இதழுக்காக புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கத் தொடங்கினார்.
‘டால்டா 13’ என்ற புனைபெயரில் தனது புகைப்படங்களை பிரசுரிக்கக் கொடுத்தார், ஹோமாய். அவர் பிறந்த ஆண்டு 1913, அவரது முதல் காரின் நம்பர் பிளேட் எண் டி எல் டி 13 இரண்டையும் சேர்த்து, மேற்கண்ட புனைபெயரை உருவாக்கினார்.
தோளில் கேமரா பையை மாட்டியபடி மோட்டார் சைக்கிளில் செல்வது அந்நாளில் டெல்லியில் சாதாரணமான காட்சி சிலர் அவரை ஆச்சர்யத்துடன் பார்ப்பது உண்டு.
இரண்டாம் உலகப்போர் முடிந்தபிறகு, இந்தியாவின் சில முக்கியமான வரலாற்றுத் தருணங்களை தனது கேமராவில் சிறைபிடித்தார் ஹோமாய்.
மவுண்ட்பேட்டன் இந்தியாவில் இருந்து புறப்பட்டது,பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா இந்தியாவில் நடத்திய கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பு, மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம் ஆகியவை எல்லாம் ஹோமாயின் கேமராவின் வழியாக பிலிமில் பதிவாகின.
அமைதியின் அடையாளமாக நேரு புறாக்களை பறக்க விடும் புகழ்பெற்ற படமும் ஹோமாய் எடுத்ததுதான். நேருவை பல்வேறு கோணங்களில் படம் எடுப்பதை ஹோமாய் மிகவும் விரும்புவார்.
தனது கணவர் மறைந்த ஓராண்டு கழித்து 1970 தனது கேமராவுக்கு ஓய்வு கொடுத்தார், ஹோமாய்.
அவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருதும், அதன்பின் ஓராண்டு கழித்து பத்மபூஷண் விருதும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
கடைசி ஆண்டுகளை சொந்த மாநிலமான குஜராத்தில் கழித்த ஹோமாய், கடந்த 2012 ஆம் ஆண்டில் தனது 98 வது வயதில் இறந்தார்.
நன்றி....