புதுக்கோட்டையில் குடும்பத்தோடு அம்மனுக்கு பால்குடம் எடுத்த நகராட்சி தலைவர் | In Pudukkottai, the Municipality Chairman took milk pot to Amman Temple
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு நகராட்சி தலைவராக பதவியேற்ற திலகவதி இன்று (மார்ச் 6) பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா
இரு வாரங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கிடையில், அவரவர் வீடுகளில் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
நாளை மாலை சுமார் 4 மணிக்கு தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, இரு தினங்களுக்கு முன்பு பதவியேற்ற திலகவதி, தனது கணவரும் திமுக வடக்கு மாவட்ட பொருளாளருமான செந்தில்குமார் உட்பட குடும்பத்தினருடன் அம்மனுக்கு பால்குடம் எடுத்தார்.
இதற்காக, பால் குடம் எடுத்த அனைவரும் மஞ்சள் ஆடை, மாலை அணிந்துகொண்டு வீட்டின் அருகே உள்ள கோயிலில் இருந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால்குடத்தோடு நடந்து சென்று, அம்மனை வழிபட்டனர். நகராட்சி தலைவராக வெற்றி
பெற்றதையடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.