இது சரவெடி அல்ல… சாட்டை அடி ! – கவிஞர் காரை வீரையா
இது சரவெடி அல்ல…சாட்டை அடி!
இது சரவெடி அல்ல
சாட்டை அடி!
சட் சட் சட் சட்
சட சட சட சட
ஆயிரம், பத்தாயிரம்
லட்சம், பத்துலட்சம்
கோடி, கோடியென
சரம் சரங்களாய்
கட்டித் தொடுத்த – இத்தனை
சரவெடிகளும்கூட
சற்றேசற்று மணித்துளிகளில்
வெடித்துச் சிதறி
சாம்பலாகப் போகும் – ஆனால்
இந்தச் சரவெடிகள்
இவைகட்கு
இன்னொரு பெயரும் உண்டு
சமுதாய வெடி
சமுதாய சீரழிவுகள்
சரம்சரமாய் தொடுக்கப்பட்டு
இதோ இங்கே
வரிசை வரிசையாய்
தூக்கிலே தொங்கவிடப்பட்டும்
சாகவில்லையே!
தூக்கிலிடுபவன் தூங்கிவிட்டானா?
அல்லது
தூக்குக் கயிறே தூங்கி விட்டதா?
அய்யகோ… அய்யகோ….
அநியாயங்கள்
அக்கிரமங்கள்
எப்போதுதான் சாகும்!
மனிதனே உனது
அகங்காரம்
ஆணவக் கொலையினுக்கு
உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
ஆத்திரம்
ஆவேசப் புயலினை
உருவாக்கிக் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
பேராசை
சிபிஐ சோதனை
அதிகாரிகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
காமவெறியால்
கன்னிப் பெண்ணின் கற்புக்குள்
கலக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
ஒரு பொய்
ஒன்பது கொலையினுக்கு
சமமென்று சொல்லப்படுகிறது!
மனிதனே நீ
திருடிய பொருள்யாவும்
சிறைச்சாலை வாசலுக்கு
உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
சொத்துக் குவிப்பு
சொந்த பந்தவீடுகள் தோறும்
ரெட் ரெய்டுகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன!
மனிதனே உனது
தீவினையால்
தீவிரவாதியென முதுகில்
முத்திரை குத்தப்பட்டு அழைக்கப்படுகின்றாய்!
மனிதனே உனது
சாதிவெறியால்
ஒரு வரலாற்று சகாப்தம்
மண்ணோடு மண்ணாக போக
காரணமாக்கப்படுகின்றாய்!
மனிதனே உனது
தீடீர் அரசியல் பிரவேசம்
பதவிப் பித்துக்குள் உன்னை
தூக்கிக் கொண்டு செல்கிறது!
மனிதனே உனது
பாலியல் தொல்லையால்
‘மீடு’ உற்சாக
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
கள்ளக் கடத்தல்
உயிரில்லா(தங்கம்) சிலைகள்
உயிர்ப்பு சக்தி பெற்று உன்னை நடுத்தெருவுக்குள் ….
மனிதனே உனது
கள்ளக் காதல்
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை போய்க் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
குடிபோதை
குழப்பத்தில்
குடும்பம் கூத்தாடிக் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
லஞ்ச ஊழல்
சத்திய சோதனையை
அழித்துக் கொண்டிருக்கிறது!
மனிதனே உனது
மோசடி வித்தைக்குள்
பலபேர் தூக்குக் கயிற்றில்
தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
மனிதனே உனது
திருமண நன்னாளில்
பதினாறு பேறுகள்
பெற்று பெருவாழ்வு
வாழ்க வென
ஆன்றோரும்
சான்றோரும்
அள்ளி வீசிய
ஆசீர்வாதங்கள்! – இப்போது உன்னால்
சுக்கல் சுக்கலாக்கப்பட்டு
பொடிப் பொடியாக
மண்ணாகி – அந்த
மண்ணுக்குள்
மேலே சொன்ன
பதினாறு வகைக்
கேடுகள் விதைத்து
வீரியமிக்க செடிகளாய்
வளர்க்கின்றாயே – இது
நியாயமா? தர்மமா?
சரம் சரமாய்
தொடுத்து வைத்த
ஆயிரம் பத்தாயிரம்
லட்சம் பத்துலட்சம்
கோடி, நூறுகோடி
சரவெடிகள் கூட
சற்றே சற்று
மணித்துளிகளில்
சட் சட் சட்
சட சட சட சட வென
வெடித்துச் சிதறி
சாம்பலாகிப் போகும்
-ஆனால்
உன்னால்
மனித சமுதாயத்துக்கு
சாவுமணி அடிக்கின்ற
சர வெடிகள்
என்னென்ன தெரியுமா?
அடுக்கு வரிசையினில்
இதோ… இதோ….
அக்கிரம வெடிகள் (வன்முறை)
ஆத்திர வெடிகள் (கோபம்)
ஆவேச வெடிகள் (பேய்த்தன்மை)
இகல் வெடிகள் (பகை)
இடங்கேடு வெடிகள் (தாறுமாறு)
ஈன வெடிகள் (இழிவு)
ஈடழிவு வெடிகள் (சீர்கேடு)
உச்சல் வெடிகள் (அபகரித்தல்)
உன்மத்தன் வெடிகள் (வெறிபிடித்தல்)
ஊர்க்கொள்ளை வெடிகள் (ஊழி நோய்)
ஊழல் வெடிகள் (கையூட்டு பெறல்)
எத்தன் வெடிகள் (ஏமாற்றுபவன்)
எதிர்மறை வெடிகள் (எதிர்மறுப்பு)
ஏகல் வெடிகள் (கடத்தல், மீறுதல்)
ஏசுதல் வெடிகள் (தூற்றுதல்)
ஐகாக்கிரன் வெடிகள் (திருடன்)
ஐங்கனை வில்லிவெடிகள் (காமன்)
ஒறுவினை வெடிகள் (தீராவருத்தம்)
ஒற்றுமையிலா வெடிகள் (ஒற்றுமை இல்லாதது)
ஓமல் வெடிகள் (அபவாத பேச்சு)
ஓமிடி வெடிகள் (நாசம் செய்தல்)
ஔவித்தல் வெடிகள் (பொறாமைப்படுதல்)
ஔவியம் வெடிகள் (தீவினை)
இத்தனை வெடிகளும்
இவ்வுலகில் இல்லையெனில்
அதுதான்
உண்மைத் தீபாவளி
உன்னத தீபஒளி திருநாள்!
இத்தனை வெடிகளும்
இவ்வுலகில் இல்லையெனில்
அதுதான்
உண்மையான உன்னத
கிருஸ்துமஸ் திருநாள்!
இத்தனை வெடிகளும்
இவ்வுலகில் இல்லையெனில்
அதுதான்
உண்மையான உன்னத
ரம்ஜான் திருநாள்!
அந்தத்
திருநாள்கள் வருமா?
இது சரவெடி அல்ல… சாட்டை அடி !
சமூக விழிப்புணர்வு சார்ந்த கவிதைகள் மற்றும் பாடல்கள், உலக அமைதிக்காக சமாதான அமைப்பு ஏற்படுத்த வலியுறுத்தும் கட்டுரை நூல். நச்சு கிருமிகள் பரவாமல் தடுக்க வருமுன் காப்போம் !