கொம்பேறிமூக்கன் அல்லது விலரணை பாம்பு (Dendrelaphis tristis)
கொம்பேறிமூக்கன் அல்லது விலரணை பாம்பு (Dendrelaphis tristis) என்பது ஒரு நஞ்சற்ற மரவாழ் பாம்பு ஆகும்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன
துணைவரிசை: பாம்பு
குடும்பம்: Colubridae
பேரினம்: Dendrelaphis
இனம்: D. tristis
விளக்கம்
பகலாடியான இப்பாம்பு கழுத்தைவிட சற்று பெரிய தட்டையான தலையைக் கொண்டுள்ளது. பெரிய கண்களும் கொண்டு ஒல்லியான, நீளமான உடல் கொண்டிருக்கும். இதன் உடலின் முதுகுப் பகுதியில் வெண்கல நிற பட்டைகள் கொண்டிருக்கும். உடலின் பக்கவாட்டில் அடர் கரும்பழுப்பு நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் உடல் நீளத்தில் மூன்றில் ஒரு பங்காக இதன் ஒல்லியான வால் நீண்டிருக்கும். இதன் உடலின் பக்கவாட்டில் ஒரு மெல்லிய வெள்ளை நிற குறுக்குக்கோடு கழுத்தில் ஆரம்பித்து வால்வரை நீண்டு இருக்கும். இதன் நிற அமைப்பானது இலைகள் மத்தியில் நல்ல உருமறைப்பை அளிக்கிறது. இதன் வயிற்றுப் பட்டையில் ப வடிவ செதில்கள் கொண்டுள்ளன. இந்த செதில்கள் மரவாழ் பாம்பான இது மரத்தைப் பற்றிக் கொண்டு ஏற உதவியாக இருக்கக்கூடியது. இந்த பாம்புகளின் உடல் வழவழப்பான மிருதுவான செதில்களைக் கொண்டுள்ளது. இந்த பாம்பினத்தில் ஆண் பாம்புகளைவிட பெண் பாம்புகள் சற்று பருமனாகவும், நீளமாகவும் இருக்கும்.
பழக்கவழக்கம்
கொம்பேறிமூக்கன் பாம்புகள் பொதுவாக மரப் பொந்துகளில் வாழக்கூடியது. இரவு நேரத்தில் உயர்ந்த மரத்தில் அமர்ந்துகொண்டு இதன் உணவான மரத் தவளைகள், பல்லிகள், தவளைகள், மரத்தில் வாழும் சிறு பறவைகள், ஒணான் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது. ஆபத்தை ஏற்படுத்தாத இந்த பாம்பு மர உச்சியில் இருந்து தாவக்கூடியது. இந்த பாம்பு சுறுசுறுப்பான விரைவான துணிவுடைய பாம்பு ஆகும். இது தென் இந்தியாவிலும், இமயமலை அடிவாரத்திலும் காணப்படுகிறது. இந்தப் பாம்பு செப்டம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையே ஆறு அல்லது ஏழு முட்டைகளை இடுகிறது. பிறகு 4-6 வாரங்களுக்கு அடைகாக்கிறது. பிறக்கும்போது அரையடி நீளமுள்ள இப்பாம்புகள், 4 முதல் 5 அடி நீளம்வரை வளர்கின்றன.
நம்பிக்கைகள்
கொம்பேறிமூக்கன் பாம்பு நஞ்சுள்ளது என்றும், இது கடித்துவிட்டால் இறந்துவிடுவார்கள் என்றும், அவ்வாறு இறந்தவர்களை சுடுகாட்டில் எரிப்பதை மரத்தின் மீது ஏறி பார்க்கும் என்று மக்களிடம் ஒரு கட்டுக்கதையும் அச்சமும் உள்ளது.