பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அண்ணாமலை | Leadership will decide on admitting Sasikala into BJP, says Annamalai
நெல்லை/திருச்சி: பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “அதிமுகவில் சசிகலாவை சேர்த்துவிட்டால் அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அதிமுகவில் சேர்க்காவிட்டால், பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார். பேட்டியின்போது, சசிகலாவின் பெயரைச் சொல்லாமல் சின்னம்மா என்று நயினார் நாகேந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, “பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. இது தனி ஒரு மனிதன் முடிவெடுக்கக்கூடிய விஷயம் கிடையாது. இதுபோன்ற நிகழ்வு நடக்குமேயானால், அது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமைக் குழுவின் ஆலோசனைப்படியே முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்
ஆனால், சசிகலா இதுவரை பாஜகவில் இணைய ஒரு சிறிய விருப்பம் கூட காட்டியதில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த அவர் அன்று தொட்டு இன்று வரை அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று மட்டுமே சூளுரைத்து வருகிறார்.