கைதிகளின் உளவியல் சிக்கலை தீர்க்க சிறைகளில் நூலகம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் | Libraries on Prisons to Address Psychological Problems of Prisoners: Judges Instructions
மதுரை: தமிழகத்தில் சிறைகளில் நூலகம் அமைப்பதால் கைதிகளின் உளவியல் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 135 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், 103 கிளைச்சிறைகள், 10 பெண்கள் கிளைச் சிறைகள், 7 சிறப்பு கிளைச் சிறைகள் உள்ளன. சிறைகளில் நூலகம் அமைப்பது முக்கியமானது. சிறைக்கைதிகளின் மனநிலையை மாற்றுவதில் நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால், பெரும்பாலான சிறைகளில் நூலகங்களுக்கான சிறப்பு வசதிகள் இல்லை. சிறைகளில் காற்றோட்டம், வெளிச்சம் இருப்பதில்லை. சிறை நூலகங்களில் புத்தகங்கள் முறையாக அடுக்கி வைக்கப்படுவதில்லை.
சிறை விதிகளில் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும், கைதிகள் அனைவருக்கும் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான சிறைகளில் இந்த விதி அமலில்இல்லை. எனவே, தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலும் நூலகத்துக்கான உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும். நூலகங்களை முறையாகப் பராமரிக்கவும். டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கவும். நூலகர்கள் நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வு, இந்த வழக்கு முக்கியமானது. பல நேரங்களில் கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்குப் புத்தகங்கள் தீர்வாக இருக்கும். சிறைகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மொழிப் புத்தகங்களும் வைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, மனு தொடர்பாக சிறைத் துறை கூடுதல் செயலர்,உள்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.