வெண்பாக்கம், அம்பத்தூரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார் | new bus stand at Venpakkam, Ambattur
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், வெண்பாக்கம், அம்பத்தூர் பேருந்து நிலையங்கள் உட்பட ரூ.150.05 கோடியிலான திட்டப்பணிகளுக்கு முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதிபெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடுமற்றும் பெருநகரத் திட்டமிடல்தொடர்பான கொள்கை முடிவுகளைசெயல்படுத்துதல், நில வகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவானவளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பணிகளை சிஎம்டிஏ செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சிஎம்டிஏ சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில் ரூ.97 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்கட்டப்பட உள்ளது. அதேபோல், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ரூ.13.85 கோடியில் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதுதவிர,கொண்டித்தோப்பில் ரூ.11.50 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம், கோயம்பேடு சாலை சந்திப்பில் ரூ.10.30 கோடியில் இயற்கை வனப்புடன் புதியபூங்கா, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ. 8.75 கோடி மதிப்பில் புதிய உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
மேலும், காசிமேடு கடற்கரை பகுதியில் ரூ.8.65 கோடியில் கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணிநடைபெற உள்ளது. இத்திட்டப்பணிகளுக்கு முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலர் சிவ்தாஸ்மீனா, வீட்டுவசதித் துறை செயலர்சி.சமயமூர்த்தி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல் மருத்துவக் கல்லூரி திறப்பு: முன்னதாக, புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ரூ.8.89 கோடியில் கட்டப்பட்டுள்ள 27 சுகாதாரத் துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி உடன் இருந்தனர்.