சினிமாதிரைப்படம்

நுங்கம்பாக்கம் (2020)- திரை விமர்சனம்

நுங்கம்பாக்கம் திரை விமர்சனம்

நடிகர்அஜ்மல் அமீர்
நடிகைஆயிரா
இயக்குனர்ரமேஷ் செல்வன்
இசைசாம் டி ராஜ்
ஓளிப்பதிவுஜோன்ஸ் ஆனந்த்

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் அஜ்மல். அந்த சமயத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாயகி ஹைரா வெட்டி கொலை செய்யப்படுகிறார். இது குறித்த தகவல் முதலில் ரெயில்வே காவல்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. கொலை நடந்து 3 மணி நேரம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இந்த வழக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. அஜ்மல் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். 


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார் அஜ்மல். ஒருகட்டத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தின் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்து பார்த்ததில் கொலை நடந்த சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் ஓடுவதை காணும் அஜ்மலுக்கு அவர் மீது சந்தேகம் எழுகிறது.

இதையடுத்து அந்த நபரை தேடிப்பிடித்து விசாரணையை தொடங்குகிறார் அஜ்மல். சந்தேகத்தின் பேரில் ஹீரோ மனோவிடம் விசாரணை மேற்கொள்கிறார் அஜ்மல். இதையடுத்து விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் நாயகி ஹைராவை கொலை செய்தது யார் என அஜ்மல் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன், இவர் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்துள்ள படம் தான் நுங்கம்பாக்கம்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். நிஜ சம்பவங்களை படமாகியுள்ள இயக்குனர் போலீஸ் விசாரணையை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகனாக நடித்துள்ள மனோ எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி ஹைரா படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், படம் முழுக்க அவரை சுற்றியே நடக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜ்மல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


அனைவருக்கும் தெரிந்த கதை என்றாலும், இந்த வழக்கின் விசாரணையின் போது நடந்தது என்ன என்பதை கற்பனை கலந்து விறுவிறுப்பு குறையாமல் காட்டியிருக்கிறார் இயக்குனர். சாம் டி ராஜின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.


மொத்தத்தில் ‘நுங்கம்பாக்கம்’ வரவேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *