செய்திகள்

ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Nurse Observation Centers with Oxygen Beds: Inaugurated by CM Stalin

சென்னை: ரூ.364.22 கோடி செலவில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் மற்றும் 516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ரூ.65 கோடி செலவில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழகத்தில் முதல் முறையாக 266 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்களையும் மற்றும் 97 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள 516 படுக்கைகளுடன் கூடிய பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.14) திறந்து வைத்தார்.

2021-22ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தமிழகத்தில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்களுடன் (Central Monitoring Nursing Stations) கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும்; 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 266 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார அளவில் உள்ள 139 அரசு மருத்துவமனைகளில் அமைந்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்களை (Central Monitoring Nursing Stations) முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள தீவிர சிகிச்சைப் படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முக்கிய உடலியக்கச் செயல்பாடுகள், தொடர்ச்சியாக மருத்துவ தரவுகள் (Vital Statistics) வாயிலாக, நேரடியாக செவிலியர் கட்டுப்பாட்டு மையத்திலுள்ள கண்காணிப்பு திரையில் காட்சிப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தற்போது வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒவ்வொரு நோயாளியின் உடலியக்க நிலையை செவிலியர்கள் தனித்தனியே அவர்களது படுக்கைக்கு அருகாமையில் சென்று கண்காணிக்கும் நிலை மாறி, அனைத்து படுக்கையில் உள்ள நோயாளிகளின் உடலியக்க நிலையை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கண்காணிக்கும் இப்புதிய முறை அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக நோயாளிகளின் உடலியக்க தன்மைக்கேற்ப, உரிய சிகிச்சை, சரியான நேரத்தில், சிறப்பு மருத்துவக்குழுவினரால் வழங்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.

மேலும், 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூபாய் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 97 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 516 படுக்கைகளுடன் கூடிய பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளை (Hybrid ICU) முதல்வர் திறந்து வைத்தார்.

இதன்மூலம், இப்பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் படுக்கைகள் (ICU – Intensive Care Unit) ஒவ்வொன்றுடனும் உயர்ரக மருத்துவக் கருவிகளான, மல்டிபாராமானிட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், சிபேப் (C-PAP), இசிஜி, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சிரிஞ் பம்ப், என்டோடிரக்கியல் கப் மானோமீட்டர் (Endotracheal Cuff Manometer) இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தீவிர சிகிச்சைப் படுக்கைகள் (Hybrid ICU) அனைத்தும் ஒருங்கிணைந்த மத்திய செவிலியர் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி அருகில் 2,93,000 சதுர அடி பரப்பளவில் 65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிறுவன வளாகத்தில், மருத்துவமனைக் கட்டடம், கல்லூரிக் கட்டடம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், பொது சமையலறை மற்றும் உணவுக்கூடம், இயக்குநர் மற்றும் நிலைய மருத்துவர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், இயற்கை மருத்துவச் சிகிச்சைகளான நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், யோகா கிரியா சிகிச்சைகள், மண் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும், யோகா பயிற்சிகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். மேலும், 100 மாணாக்கர்கள் பயிலக்கூடிய ஐந்தரை ஆண்டு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு (BNYS) மற்றும் 30 மாணாக்கள் பயிலக்கூடிய மூன்று ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புகளும் (MD) வழங்கப்படும்.

மேலும், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 30 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் நூலகக் கட்டடம், விடுதிக் கட்டடம், தேர்வுக்கூடம் மற்றும் சீமாங் கட்டடம், தாம்பரம் – அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன சமையலறை, உதகமண்டலம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பள்ளி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 62 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடங்கள், பயிற்சி மருத்துவர் குடியிருப்புகள், உள்ளிருப்பு மருத்துவர் குடியிருப்புக் கட்டடம், நோய் குறியியல் கூடுதல் செயல் விளக்கக் கட்டிடம் மற்றும் பிணஅறுவை மற்றும் ஆராய்ச்சிக் கட்டடம், காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 16 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் அறை மற்றும் சாய்தள வசதி; பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகக் கட்டடம், புதுக்கோட்டையில் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகக் கட்டடம், திருவாரூர் மாவட்டம், ஆலத்தம்பாடி மற்றும் திருவாலங்காடு ஆகிய இடங்களில் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், களப்பால் மற்றும் குளிக்கரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், திருவண்ணாமலை மாவட்டம், நம்மியம்பட்டில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், என 124 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வாயிலாக 108 இலவச அவசரகால ஊர்தி சேவையை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சாலைப்பாதுகாப்பு மாதிரி வழித்தடத்தில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II நிதியின் கீழ் 5 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருபது எண்ணிக்கையிலான 108 அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top