முன்அனுமதி பெறாமல் நீதிமன்ற திறப்பு விழா – நீதிமன்ற பணியாளர்கள் 8 பேர் பணியிடை நீக்கம் | Opening of court without prior permission – 8 court employees sacked
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிய சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி மற்றும் கறம்பக்குடியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களின் திறப்பு விழா புதுக்கோட்டையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
இதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா திறந்து வைத்தார். இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்றைய தினம் பொன்னமராவதியில் நீதிமன்றம் செயல்பட உள்ள தற்காலிகக் கட்டிடத்தை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
‘‘யாருடைய அனுமதியும் இல்லாமல் பேரூராட்சி மக்கள் பிரதிநிதி மற்றும் சில ஊழியர்கள் நீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்து கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பொன்னமராவதி போலீஸில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நிர்வாக அலுவலர் மகேந்திரன் புகார் அளித்தார்.
இந்நிலையில், நீதித் துறை அலுவலர்களிடம் எவ்வித முன்அனுமதி பெறாமலும், விதிகளுக்கு புறம்பாகவும் திறப்பு விழா நடத்தியதால் பொன்னமராவதி நீதிமன்ற பணியாளர்கள் 8 பேரையும் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.அப்துல்காதர், ஏப்.8-ம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.