தண்ணீரின்றி கைவிடப்பட்ட நிலையில் மழையால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ஆழ்துளை கிணறுகள்: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி | Bore wells
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பைவிட அதிக அளவில் மழை பெய்ததால், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் கைகொடுத்துள்ளதால் பாசன பரப்பளவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் திருவரங்குளத்தில்தான் அதிக எண்ணிக்கையில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து பாசனம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு புள்ளி விவரப்படி திருவரங்குளத்தில் 4,690 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதேபோல, அறந்தாங்கியில் 4,198, புதுக்கோட்டையில் 3,925, கறம்பக்குடியில் 3,410, பொன்னமராவதியில் 2,878, கந்தர்வக்கோட்டையில் 2,343, குன்றாண்டார்கோவிலில் 2,074, அரிமளத்தில் 1,079, விராலிமலையில் 979, அன்னவாசலில் 838, திருமயத்தில் 813, மணமேல்குடியில் 117, ஆவுடையார்கோவிலில் 3 ஆழ்துளை கிணறுகள் என மொத்தம் 27,617 ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
தற்போது ஆயிரம் அடி ஆழத்துக்கும் அதிகமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு சுமார் 350 அடி ஆழம் வரைதான் அமைக்கப்பட்டன. ஆனால், பருவமழை போதியளவு பெய்யாததால் கணிசமான எண்ணிக்கையிலான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. கடந்தாண்டு இயல்பைவிட கூடுதலாக மழை பெய்ததுடன், நிகழாண்டு அதிகளவில் மழை பெய்வதால், கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் இயங்கி வருவதால் சாகுபடிப் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து ஆழ்துளை கிணறுகளில் பழுது நீக்குதல், தூர்வாரும் பணியில் ஈடுபடும் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த எம்.வீரமணி கூறியது: மாவட்டத்தில் காவிரி நீர் பாயக்கூடிய பகுதியில் குறைந்த ஆழத்திலும், மற்ற பகுதியில் அதிக ஆழத்திலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டுக்கு முன்பு வரை குறைந்த ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் பெரும் பகுதி செயலிழந்துவிட்டன. மற்ற ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. புதிதாக அதிக ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பெருந்தொகை செலவாகும் என்பதால் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளில் தூர்ந்த மண்ணை தூர்வாரினோம். புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கிணறுகள் தூர்வாரப்படும். இந்நிலையில், கடந்த ஆண்டு இயல்பான மழை அளவு 786 மி.மீயை விட 550 மி.மீ கூடுதலாக பெய்ததுடன், நிகழாண்டு தென்மேற்குப் பருவமழையும் ஓரளவுக்கு பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மீண்டும் இயங்கி வருகின்றன. விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனால், தூர்ந்த ஆழ்துளை கிணறுகளை தூர்வாருவதற்கு அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாற்று ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் அவசியமும் ஏற்படவில்லை. மாறாக, நூற்றுக்கணக்கானோருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதால் ஆர்வத்துடன் புதிய ஆழ்துளை கிணறுகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர் என்றார்.