நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ‘வசூல்’ – புதுக்கோட்டை விவசாயிகள் தர்ணா | Pudukkottai farmer road block protest
புதுக்கோட்டை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்காத அதிகாரிகளை கண்டிப்பதாகக் கூறி, புதுக்கோட்டை குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் எழுந்து நின்று “மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.80 வரை விவசாயிகளிடம் இருந்து முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல முறை முறையிட்டும் இந்தக் கோரிக்கை தீர்க்கப்படவில்லை. அலுவலர்கள் அலட்சியமாகவே செயல்படுகின்றனர்” என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர், அங்கிருந்து சென்று ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியிலில் ஈடுபட்டனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அலுவலர்கள் மற்றும் போலீஸார் சமாதானம் செய்தனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்று ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, பணம் வசூலிப்போர் மீது, பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் தலைமையிலான அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனிடையே, போராட்டம் தொடர்பாக, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறும்போது, “அலுவலர்கள் அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளிடம் சட்ட விரோதமாக பணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் விநியோகிக்காததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது” என்று கூறினார்.