செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை முத்துக்குடா தீவு பகுதியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த முடிவு: சுற்றுலாத் துறை அலுவலர்கள் ஆய்வு | Pudukottai Muthukuda Island area to be developed as a tourist destination: Tourism officials study

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா தீவு பகுதியை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது குறித்து, சுற்றுலாத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆவுடையார்கோவில் வட்டம் நாட்டானி புரசக்குடி ஊராட்சி முத்துக்குடா கடல் பகுதியில் ஒரு பகுதியானது சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் தீவு போன்று உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ் ஆண்டு சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலாத் துறை அலுவலர்கள், சுற்றுலா ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்களோடு ஆட்சியர் கவிதா ராமு அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்திலேயே புதுக்கோட்டையில்தான் அதிக தொல்லியல் சின்னங்கள் உள்ளன. எனினும், பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய சுற்றுலாத் தலம் இல்லாததை போக்கும் வகையில், முத்துக்குடா கடல் பகுதியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியர் கவிதா ராமு தலைமையிலான அலுவலர்கள் அண்மையில் முத்துக்குடாவை ஆய்வு செய்தனர். அவரது உத்தரவின்பேரில், முத்துக்குடா தீவில் கடலுக்குள் உள்ள அலையாத்திக் காட்டை இரண்டாக பிரிக்கும் வகையில், சுமார் 1 கிலோ மீட்டருக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

அலையாத்திக் காட்டில் வெட்டப்பட்டுள்ள கால்வாய்.

மேலும், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் தலைமையிலான சுற்றுலா மேம்பாட்டு அலுவலர்கள் இன்று (ஆக். 22) படகில் சென்று ஆய்வு செய்தனர். ஆவுடையார்கோவில் பகுதி வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்குழுவினர் மூலம், இப்பகுதியில் சுற்றுலாத் துறையின் மூலம் படகு குழாம் அமைத்தல், கடற்கரையில் உள்ள அரசு நிலத்தைக் கையகப்படுத்தி தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கென பிரத்யேகமாக கருத்துரு தயாரித்து, அரசிடம் ஒப்புதல் பெற்று, அதற்கேற்ப பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *