சதை விற்பதும் சாதரணம் இல்லை.. சூர்யா ரெங்கசாமி
பருவந்தொட்ட நாள் தொட்டு படிக்கவும் ,
நடிக்கவும் பழகி கொண்டோம் .
பாவாடை கட்டும் போதும் தடம் பதிய கூடாது,
பத்து பேரு பார்க்கையில் பதிய நடக்க கூடாது.
இல்லாத மார்பை இருப்பது போல் காட்ட வேண்டும்.
கூரை சேலை கட்டும் போதும் முந்தி விலக வேண்டும்.
பட்டு சேலை கட்டும் போதும் பாதம் தெரியவேண்டும்.
மணிக்கொரு முறை முகம் கழுவ வேண்டும் ,
நாளுக்கு இருதரம் குளிக்க வேண்டும் ,
நடைக்கு ஒருதரம் வாய் கழுவ வேண்டும்,
வாய்ப்பு இருக்கும் போது எல்லாம் நல்லா உடுத்துவேண்டும்.
தெருவில் நடக்கும் போது தேரு போல் நடக்க வேண்டும்- தேவர்களே
ஆனாலும் தேவைக்கு வருமா என்றுதான் பார்க்க வேண்டும் .
ஆயிரம் பேரு இருந்தாலும் ஆம்பளையை மட்டும் பார்க்க வேண்டும்.
ஆம்பளைக்குள் ஆஸ்தியை மட்டும் தேட வேண்டும்.
கதவை தட்டுவனிடம் எல்லாம் கறாராக இருக்க வேண்டும் .
காசு உள்ளவனை மட்டும் கட்டிலுக்கு அழைக்க வேண்டும்
கட்டிலில் இருக்கும் போதே கஞ்சிக்கு வழி பண்ண வேண்டும்
கட்டிலை விட்டால் கஞ்சிக்கும் காசு தேறாது.
பருவ பையனிடம், பக்குவம் இருக்காது.
வாலிபனிடம், வாய் பேச்சு இருக்காது.
வயதானவர்களிடம், வரம்பு எல்லை இருக்காது.
பருவத்திடம் -பாயும் தோலும் வேகும்
வாலிபரிடம் -வாயும் வயதும் எரியும்
பருவத்தையும் வாலிபத்தையும் பொறுக்க வேண்டும் ,
தினம் பொங்கி சாப்பிட..
நோவு என்று ஒரு பொழுது படுத்தாலும் பொங்கி வர வழியில்லை,
தூர நாட்கள் கூட துயரம் தான்- தூர நாட்களில்
தோலைத்தே இருக்க வேண்டும் -என் பசியை
பருவத்தின் பல்லு பட்டு பதறும் – என் பாகங்கள் ,
சிலரின் பார்வை பட்டே வேகும் -என் பருவங்கள்.
உடம்பை முறுக்கி திரியாக்கி விடுவர் சிலர் ,
மூச்சை நிறுத்தி உயிரோடு உறவாடுவர் பலர்,
நகத்திற்கு நகையாய் என் தோல் கேட்பர் சிலர்.
தங்கள் காசுக்கு கடித்து வைப்பர் பலர்,
மஞ்சள் பூசி மறைக்க வேண்டும் மார்பில் பட்ட காயங்களை ,
சாயம் பூசி சரிக்கட்ட வேண்டும் உதட்டில் படியும் ரத்த கறைகளை,
வலியும் வேதனையும் வந்தவனுக்கு தேவையில்லை.
அவன் வேகம் தீரும் மட்டும் என்னை விலக விட்டதும் இல்லை,
ஒவ்வாரு முறை குளிக்கும் போது என் குலமே எரியும் ,
அடி எடுத்து வைக்கையில் அடிவயிறும் அலறும் ,
மாராப்பு போடுகையில் மாரும் மரிக்கும் ,
தனியா படுக்கையில் என் உடலே கொதிக்கும்- குதறி எடுத்த சதைகளில் வழியே .
கை நீட்டி கூப்பிட்டதில்லை -யாரையும்
என் கண் பார்வைக்கு வந்தவனை கட்டிலில் ஏமாற்றியதில்லை ,
புது சரடு கட்டினவனை புன்னகைத்து பார்த்தது இல்லை .
யார் குடி புகுந்தும் , குடித்தது இல்லை .
என் குடி வந்தவனை கட்டினதும் இல்லை,
புகழோடு இருப்பவனை புத்திகெட்டும் பார்க்கவில்லை,
என்னால் ஒரு குடி கெட்டதும் இல்லை ,
என்னை தொட்டவனை நான் தொரத்தினதும் இல்லை,
ஆனாலும்..,
தெருவிலே நடக்கையில் தேவடியாள் என்பர்
வீதியில் நடக்கையில் விபச்சாரி என்பர்
அனைவரின் பார்வையிலும் அவிசாரி நான்தான்
கூட படுத்தவனுக்கும் பலசாதி நான்தான்
இங்கே
விளைவிப்பது போல்
சதை விற்பதும் சாதரணம் இல்லை..
சூர்யா ரெங்கசாமி