ஆன்மிகம்

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 18 & 19 (Sri Sai Satcharitam Chapter – 18 & 19)

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 18 & 19 (Sri Sai Satcharitam Chapter – 18 & 19)

ஹேமத்பந்த்எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்‌ – திருவாளர்சாதே, திருமதி தேஷ்முக்கின்கதைகள்‌ – நல்ல எண்ணங்களின்அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல்‌ – உபதேச வகைகள்‌ – அவதூறு பேசுவது பற்றியும்‌, உழைப்புக்கு ஊதியம்கொடுப்பது பற்றியும்போதனைகள்‌.

முந்தைய இரு அத்தியாயங்களில்‌ துரித பிரம்மஞானத்தை பெற விழைந்த பணக்காரர்‌, பாபாவால்‌ எவ்வாறு நடத்தப்பட்டார்‌ என்பதை ஹேமத்பந்த்‌ விவரித்தார்‌. இந்த இரண்டு அத்தியாயங்களிலும்‌ அவர்‌ தாமே பாபாவால்‌ எவ்வாறு ஏற்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்‌ எனவும்‌, எங்ஙனம்‌ நல்ல எண்ணங்களை பாபா ஊக்குவித்து அவைகளைப்‌ பலனளிக்கச்‌ செய்தார்‌ எனவும்‌ விவரித்து, ஆன்மிக முன்னேற்றத்தைப்‌ பற்றியும்‌, அவதூறு பேசுவது குறித்தும்‌, உழைப்புக்குரிய ஊதியத்தைப்‌ பற்றியும்‌ உள்ள பாபாவின்‌ போதனைகளையும்‌ அளிக்கிறார்‌.

முன்னுரை

தமது அடியவர்களின்‌ தகுதிகளை முதலில்‌ சத்குரு கவனிக்கிறார்‌ என்பதும்‌ பின்னர்‌ அவர்கள்‌ மனத்தை எள்ளளவும்‌ குழம்பச்‌ செய்யாமல்‌, பொருத்தமான செயல்துறைக்‌ கட்டளைகளை அளித்து ஆத்மானுபூதி என்ற லட்சியத்திற்கு, தொடர்ந்து அவர்களை இட்டுச்செல்கிறார்‌ என்பதும்‌ நன்றாக அறியப்பட்ட உண்மை ஆகும்‌. இவ்வகையில்‌ சத்குரு எவைகளை உபதேசிக்கிறாரோ அல்லது கட்டளையிடுகிறாரோ அவைகள்‌ பலரறிய வெளியிடப்படக்கூடாது என்று சிலர்‌ கூறுகிறார்கள்‌. அவர்களுடைய உபதேசங்கள்‌ பிரசுரிக்கப்பட்டால்‌ அவை பயனற்றதாகிவிடுகின்றன என்று சிலர்‌ நினைக்கிறார்கள்‌. இக்கருத்து சரியானதன்று.

 சத்குருவானவர்‌ ஒரு பருவமேகம்‌ போன்றவர்‌. தமது அமிர்தத்தினை நிகர்‌ மொழிகளைத்‌ தங்குதடையின்றி விரிவாக அனைத்து இடங்களிலும்‌ பரவும்படி கருதரிய ஆனந்தமழை பொழிகிறார்கள்‌. இவைகளை நாம்‌ மகிழ்ந்தனுபவித்து நமது உள்ளம்‌ நிறைவெய்தும்வரை ஜீரணித்துக்கொண்டு, அதன்பின்‌ தனிப்பயன்‌ கருதி ஷேம ஒதுக்கீடு ஏதுமின்றி மற்றவர்களுக்கும்‌ பரிமாற வேண்டும்‌. நமது விழிப்பு நிலையில்‌ அவர்‌ போதிப்பவைகளுக்கு இந்நியதி பொருந்துவதுடன்‌ நில்லாது, கனவு நிலையில்‌ அவர்‌ நமக்கு அளிக்கும்‌ காட்சிகளுக்கும்‌ இது பொருந்துவதேயாம்‌. உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியைக்‌ கூறுமிடத்து புதகெளசிக ரிஷி, தாம்‌ கனவில்‌ கண்டதான புகழ்பெற்ற ராமரக்ஷா ஸ்தோத்திரத்தை* பதிப்பித்தார்‌.

தனது குழந்தைகள்‌ உடல்‌ நலம்‌பெறுதற்‌ பொருட்டாக கசப்பான ஆனால்‌ ஆரோக்கியமான மருந்துகளை அவர்களின்‌ தொண்டைக்குள்‌ வலிந்து புகட்டும்‌ பாசமுள்ள தாயைப்‌ போன்றே சாயிபாபா தமது அடியார்களுக்கு ஆன்மிக செயல்துறைக்‌ கட்டளைகளைத்‌ தெரிவித்தார்‌. அவரது முறைமை திரையிடப்பட்டதோ ரகசியமானதோ அல்ல. ஆனால்‌ முற்றிலும்‌ வெளிப்படையானவை. அவருடைய கட்டளைகளைப்‌ பின்பற்றிய அடியவர்கள்‌ தங்களின்‌ குறிக்கோளை எய்தினார்கள்‌.

சாயிபாபாவைப்‌ போன்ற சத்குருக்கள்‌ நமது அறிவாற்றல்‌ என்னும்‌ கண்களைத்‌ திறந்துவிட்டு, ஆத்மாவின்‌ தெய்வீக அழகுகளை நமக்குப்‌

ஸ்ரீ ராமரைப்‌ புகழ்ந்து, ரகஷணையை வேண்டி பாடப்பெறும்‌ இரட்டை வரி செய்யுட்களாலான ஸ்லோகம்‌.‌ புலப்படுத்துகிறார்கள்‌. இது செய்யப்படும்போது புலனுணர்வுப்‌ பொருட்களில்‌ நமக்குள்ள ஆசை மறைந்துவிடுகிறது. விவேகம்‌ (பகுத்துணர்தல்‌), வைராக்கியம்‌ (பற்றறுத்தல்‌) என்னும்‌ இரட்டைக்‌ கனிகள்‌ நமது கைகளுக்குக்‌ கிட்டுகின்றன. ஞானமென்பது தூக்கத்தில்‌ கூடத்‌ துளிர்விடுகின்றது.

முனிவர்களின்‌ (சத்குரு) தொடர்பைப்‌ பெறும்போதும்‌, அவர்களுக்குச்‌ சேவை செய்யும்போதும்‌, அவர்களின்‌ அன்பைப்‌ பெறும்போதும்‌, இவைகள்‌ அனைத்தினையும்‌ நாம்‌ எய்துகிறோம்‌.

தமது அடியவர்களின்‌ அவாக்களைப்‌ பூர்த்தி செய்யும்‌ ஆண்டவன்‌ நமது உதவிக்கு வருகிறார்‌. நமது தொல்லைகளையும்‌, கஷ்டங்களையும்‌ நீக்கி மகிழ்வெய்தச்‌ செய்கிறார்‌. ஆண்டவனாகவே கருதப்படும்‌ சத்குருவின்‌ உதவியே இம்முன்னேற்றத்திற்கு முழுவதுமான காரணமாகும்‌. எனவே நாம்‌ எப்போதும்‌ சத்குருவையே பின்பற்றி இருந்து அவர்தம்‌ கதைகளைச்‌ செவிமடுத்து அவரின்‌ பாதத்தில்‌ வீழ்ந்து வணங்கி அவருக்கே சேவைசெய்ய வேண்டும்‌. இப்போது பிரதானமான கதைக்கு வருவோம்‌.

திருவாளர்சாதே

பல ஆண்டுகளுக்கு முன்‌ பம்பாயின்‌ கவர்னர்‌ ரே பிரபுவால்‌ அடக்கப்பட்ட க்ராஃபோர்ட்‌ நடப்பாட்சியின்போது, சிறிதளவு பிரசித்தி பெற்றிருந்த சாதே என்னும்‌ பெருந்தகை ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ வணிகத்தில்‌ கடுமையான நஷ்டமடைந்தார்‌. மற்றுமுள்ள ப்ரதிகூலமான சூழ்நிலைகளும்‌ அவருக்குப்‌ பெருமளவு தொல்லையளித்து கவலையடையவும்‌, உள்ளம்‌ சோர்வுறவும்‌ செய்தது. இருப்புகொள்ளாமல்‌ இருந்து கொண்டிருந்த அவர்‌ வீட்டை விடுத்துத்‌ தொலைதூரத்திற்கு வெளியேறிப்‌ போய்விட எண்ணினார்‌.

பொதுவாக மனிதன்‌ கடவுளை நினைப்பதில்லை. ஆனால்‌ இடர்ப்பாடுகளும்‌, பேராபத்துக்களும்‌ அவனைச்‌ சூழும்போது அவன்‌ ஆண்டவரை நோக்கித்‌ திரும்பி‌ நிவாரணத்திற்காக வேண்டுகிறான்‌. அவனுடைய தீய கர்மங்கள்‌ யாவும்‌ முடிவுற்றதென்றால்‌, முனிவர்‌ ஒருவரை அவன்‌ சந்திக்கும்‌ வாய்ப்பினை கடவுள்‌ ஏற்பாடு செய்கிறார்‌. அம்முனிவரும்‌, அவனுக்கு நலமளிக்கக்கூடிய வழிமுறைகளை உபதேசிக்கிறார்‌. சாதேவுக்கும்‌ அத்தகைய அனுபவமே ஏற்பட்டது. தத்தம்‌ தேவைகள்‌ பூர்த்தி செய்யப்படவும்‌, மனச்சாந்தியை அடைவதற்கும்‌ ஏதுவாக சாயிபாபாவின்‌ தரிசனத்தைப்‌ பெற ஏராளமான மக்கள்‌ திரளாகச்‌ சென்றுகொண்டிருக்கும்‌ ஷீர்டிக்குப்‌ போகும்படி அவருக்கு அவரது நண்பர்கள்‌ அறிவுரை கூறினார்கள்‌. அவருக்கு இக்கருத்து பிடித்திருந்தது. உடனே ஷீர்டிக்கு 1917ல்‌ வந்தார்‌.

பரப்பிரம்மமாகவும்‌, சுயஞ்ஜோதியாகவும்‌, களங்கமற்றதாயும்‌, தூயதாகவுமுள்ள சாயிபாபாவின்‌ ரூபத்தைக்‌ கண்ணுற்று அவரது மனம்‌ பதைபதைப்பை விடுத்துச்‌ சாந்தமுற்றது. தமது முற்பிறவிகளில்‌ ஏற்பட்ட நல்வினைகளின்‌ குவியலே தம்மை பாபாவின்‌ புனிதத்‌ திருவடிகளுக்குக்‌ கொணர்ந்தது என அவர்‌ நினைத்தார்‌. அவர்‌ உறுதியான மனத்திட்பம்‌ வாய்க்கப்பெற்ற மனிதர்‌. உடனேயே அவர்‌ குருசரித்திரம்‌* பாராயணம்‌ செய்யத்தொடங்கினார்‌. ஸப்தாஹத்தில்‌ (ஏழு நாட்களில்‌) பாராயணம்‌ பூர்த்தியானதும்‌ அன்று இரவு பாபா அவருக்கு ஒரு காட்சி அளித்தார்‌. அது இவ்வாறானது

பாபா குருசரித்தித்தை தமது கரங்களில்‌ வைத்துக்கொண்டு அதன்‌ உட்பொருளை, முன்னால்‌ அமர்ந்து கவனத்துடன்‌ கேகட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக்கொண்டிருந்தார்‌. அவர்‌ விழித்தெழுந்து பின்னர்‌ தமது கனவினை நினைவுகூர்ந்து மிகவும்‌ மகிழ்ச்சியடைந்தார்‌. அறியாமையில்‌ குறட்டைவிடும்‌ தம்மைப்‌ போன்ற ஆத்மாக்களை பாபாவின்‌ எல்லையற்ற கருணையே எழுப்பிவிட்டு குருசரித்திர அமுதத்தினைச்‌ சுவைக்கும்படிச்‌ செய்கிறது என்று அவர்‌ நினைத்தார்‌.

* ஸ்ரீ தத்தாத்ரேயர்‌ மற்றும்‌ அவரது மறுஅவதாரங்களான ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்‌, ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஆகியோரின்‌ புனித சரித்திரம்‌. மறுநாள்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்திடம்‌ இக்காட்சியைப்பற்றி அவர்‌ தெரிவித்து சாயிபாபாவிடம்‌ அதன்‌ பொருளைப்பற்றிய நுட்பக்குறிப்பினைக்‌ குறித்து கேட்கும்படி வேண்டிக்கொண்டார்‌. அதாவது ஒருவாரம்‌ பாராயணம்‌ செய்தது போதுமா? அல்லது மீண்டும்‌ ஆரம்பிக்க வேண்டுமா என்பதாக. காகா சாஹேப்‌ தீக்ஷித்தும்‌ தமக்குக்‌ கிடைத்த ஓர்‌ உரிய சந்தர்ப்பத்தில்‌ பாபாவை நோக்கி, “தேவா (ஓ! தெய்வமே) இந்தக்‌ காட்சியால்‌ சாதேவுக்கு எதனைக்‌ குறிப்பிடுகிறீர்கள்‌. அவர்‌ சப்தாஹத்தை நிறுத்திவிடலாமா? தொடர வேண்டுமா? அவர்‌ ஓர்‌ எளிய அடியவர்‌. அவரது அவா நிறைவேற்றப்படுதல்‌ வேண்டும்‌. அவருக்குக்‌ காட்சியின்‌ பொருள்‌ விளக்கப்பட்டு, அவர்‌ ஆசீர்வதிக்கப்பட வேண்டும்‌” எனக்‌ கேட்டுக்கொண்டார்‌. பாபாவும்‌ “அவர்‌ மற்றுமொரு சப்தாஹம்‌ பாராயணம்‌ செய்யவேண்டும்‌. அதை அவர்‌ கவனமாகக்‌ கற்பாராயின்‌ அவர்‌ தூயவராகி நன்மை பெறுவார்‌. பரமாத்மாவும்‌ மகிழ்வடைந்து இச்சம்சார வாழ்க்கையின்‌ பந்தங்களினின்று அவரை விடுவிப்பார்‌” என பதிலளித்தார்‌.

இச்சமயத்தில்‌ ஹேமத்பந்த்‌ அங்கே இருந்தார்‌. அவர்‌ பாபாவின்‌ கால்களைப்‌ பிடித்துவிட்டுக்‌ கொண்டிருந்தார்‌. பாபாவின்‌ சொற்களைக்‌ கேட்டதும்‌, அவர்‌ தன்‌ மனதில்‌ பின்வருமாறு சிந்திக்கலானார்‌, “என்ன! சாதே ஒரு வாரமே படித்துப்‌ பரிசைப்‌ பெற்றுக்கொண்டார்‌. நாற்பது ஆண்டுகளாக ஒரு பயனுமின்றி நான்‌ படித்துக்கொண்டிருக்கிறேன்‌. இந்த இடத்தில்‌ அவரது ஏழுநாள்‌ வாசம்‌ பலனளிக்க நேரிட்டு எனது ஏழுவருட வாசம்‌ (1910 – 1917) பலனேதுமின்றிப்‌ போகின்றது?! தம்‌ அறிவுரையால்‌ என்னை ஆசீர்வதிக்க வேண்டும்‌ எனவும்‌, தமது அமுதத்தை என்மீது பொழியவேண்டும்‌ எனவும்‌ கருணை மேகத்திற்காக (பாபாவிற்காக) காத்துக்‌ கொண்டிருக்கும்‌ சாதகப்‌ பறவையைப்போல எப்போதும்‌ நான்‌ காத்துக்கொண்டிருக்கிறேன்‌”. இந்த எண்ணம்‌ அவர்‌ மனதில்‌ குறுக்கிட்ட அத்தருணமே பாபா அதனை அறிந்துகொண்டார்‌. பாபா பக்தர்களின்‌ எல்லா எண்ணங்களையும்‌ படித்துப்‌ புரிந்துகொண்டு தீய எண்ணங்களைக்‌ கீழடக்கி நல்ல எண்ணங்களை ஊக்குவித்தார்‌ என்பது அடியவர்களின்‌ அனுபவமாகும்‌. ஹேமத்பந்தின்‌ உள்ளத்தைப்‌ படித்தறிந்துகொண்ட பாபா உடனே அவரை எழுந்து ஷாமாவிடம்‌ (மாதவ்ராவ்‌ தேஷ்பாண்டே) சென்று ரூ.15ஐ தக்ஷிணையாகப்‌ பெற்றுக்கொண்டு, அங்கு சிறிது நேரம்‌ அவருடன்‌ உரையாடிய பின்னர்‌ திரும்பி வரும்படிக்‌ கேட்டார்‌. பாபாவின்‌ மனதில்‌ கருணை உதயமாகியது. எனவேதான்‌ அவர்‌ இக்கட்டளையை இட்டார்‌. யார்தான்‌ பாபாவின்‌ ஆணையை மீற முடியும்‌?

ஹேமத்பந்த்‌ உடனே மசூதியைவிட்டு, ஷாமாவின்‌ வீட்டிற்கு வந்தார்‌. அவர்‌ அப்போதுதான்‌ குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக்கொண்டிருந்தார்‌. அவர்‌ வெளியேவந்து ஹேமத்பந்தை நோக்கி, “தாங்கள்‌ இப்போது இங்கே இருப்பது எங்ஙனம்‌? மசூதியிலிருந்து தாங்கள்‌ வந்துள்ளதாகத்‌ தோன்றுகிறதே? இருப்புகொள்ளாதவரைப்‌ போன்றும்‌, உளச்சோர்வுடையவராகவும்‌ ஏன்‌ காணப்படுகிறீர்கள்‌? ஏன்‌ தாங்கள்‌ தனித்து இருக்கிறீர்கள்‌? தயவுசெய்து அமர்ந்து சிறிதுநேரம்‌ இளைப்பாறுங்கள்‌. நான்‌ எனது வழிபாட்டை உடனே முடித்துவிட்டுத்‌ திரும்புகிறேன்‌. அதுவரை வெற்றிலை – பாக்கு போட்டுக்கொள்ளுங்கள்‌. பின்னர்‌ மகிழ்ச்சியுடன்‌ உரையாடலாம்‌” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்‌.

ஹேமத்பந்த்‌ முன்‌ திண்ணையில்‌ அமர்ந்திருந்தார்‌. ஜன்னலில்‌ “நாதபாகவதம்‌” என்ற பிரசித்தி பெற்ற மராத்தி நூலை அவர்‌ கண்டார்‌. பெரிய சமஸ்கிருத நூலான பாகவதத்தின்‌ பதினோராவது ஸ்கந்தத்தைப்‌ (அத்தியாயம்‌) பற்றிய ஏக்நாத்‌ முனிவரின்‌ விளக்கவுரையாகும்‌. சாயிபாபாவின்‌ யோசனையின்‌ பேரில்‌ அல்லது சிபாரிசின்‌ பேரில்‌ திருவாளர்கள்‌ பாபு சாஹேப்‌ ஜோகும்‌, காகா சாஹேப்‌ தீக்ஷித்தும்‌ ஷீர்டியில்‌ தினந்தோறும்‌ பகவத்கீதையையும்‌ (கிருஷ்ணருக்கும்‌ அவரது தோழரும்‌ பக்தருமான அர்ஜுனனுக்கும்‌ இடையே நிகழ்ந்த உரையாடலை அதன்‌ மராத்திய விளக்க உரையான பாவார்த்த தீபிகா அல்லது ஞானேஷ்வரியுடன்‌), நாதபாகவதத்தையும்‌ (கிருஷ்ணருக்கும்‌ அவரது சேவகரும்‌ பக்தருமான உத்தவருக்கும்‌ இடையே நிகழ்ந்த உரையாடல்‌) மற்றும்‌ மற்றைய பெரியநூலான ஏக்நாத்தின்‌ பாவார்த்த ராமாயணத்தையும்‌ படித்தார்கள்‌.

பாபாவிடம்‌ அடியவர்கள்‌ வந்து சில குறிப்பிட்ட கேள்விகளைக்‌ கேட்டபோது சில சமயங்களில்‌ அதில்‌ ஒரு பகுதிக்கு விடையளித்துவிட்டு பாகவத தர்மத்தின்‌ முக்கிய ஆராய்ச்சிக்‌ கட்டுரைகளான மேற்குறிப்பிட்ட நூல்களைப்‌ பாராயணம்‌ செய்வதைச்‌ சென்று கேட்கும்படிக்‌ கூறுவார்‌. அடியவர்கள்‌ சென்று அவற்றை கேட்கும்போது தங்கள்‌ வினாக்களுக்குப்‌ பூரண திருப்தியான பதில்களைப்‌ பெறுவார்கள்‌. நாதபாகவதம்‌ என்ற நூலின்‌ சில பகுதிகளை ஹேமத்பந்தும்‌ படிப்பது வழக்கம்‌. அன்று மசூதிக்குச்‌ சென்றுகொண்டிருந்த சில அடியவர்களுடன்‌ சேர்ந்து செல்வதற்காக தினந்தோறும்‌ தாம்‌ படிக்கும்‌ பகுதியை அவர்‌ பூர்த்தி செய்யவில்லை.

ஷாமாவின்‌ ஜன்னலிலிருந்து அந்த புத்தகத்தினை எடுத்து, தற்செயலாக அதைப்‌ புரட்டியபோது, அவரது ஆச்சர்யத்திற்கேற்ப முடிக்கப்படாத பகுதி வந்தது. தமது நித்ய பாராயணத்தைப்‌ பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பாபா தன்னை வெகு அன்புடன்‌ ஷாமாவின்‌ வீட்டிற்கு அனுப்பி இருப்பதாக அவர்‌ எண்ணினார்‌. எனவே முடிக்கப்படாத பகுதியைப்‌ படித்து பூர்த்தி செய்தார்‌. இது முடிவடைந்த உடனேயே ஷாமா வழிபாட்டை முடித்துவிட்டு வந்தார்‌. அவர்களிடையே பின்வரும்‌ உரையாடல்‌ நிகழ்ந்தது.

ஹேமத்பந்த்‌ : பாபாவிடமிருந்து ஒரு தூதுக்‌ குறிப்புடன்‌ நான்‌ வந்துள்ளேன்‌. தங்களிடமிருந்து தகஷஷிணையாக ரூ.15 பெற்றுக்கொண்டு, சிறிது நேரம்‌ தங்களுடன்‌ அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடிவிட்டு, பின்னர்‌ தங்களுடன்‌ மசூதிக்குத்‌ திரும்பும்படி என்னை அவர்‌ கேட்டுக்கொண்டிருக்கிறார்‌. ஷாமா : (ஆச்சரியத்துடன்‌) என்னிடம்‌ கொடுக்கப்‌ பணம்‌ ஏதும்‌ இல்லை. ரூபாய்களுக்குப்‌ பதிலாக என்னுடைய பதினைந்து நமஸ்காரங்களை பாபாவிடம்‌ தக்ஷிணையாக எடுத்துச்செல்லுங்கள்‌.

ஹேமத்பந்த்‌ : மிக நல்லது. தங்களுடைய வணக்கங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்போது நாம்‌ சிறிது உரையாடுவோம்‌. நமது பாவங்களை அழிக்கும்‌ பாபாவின்‌ சில கதைகளையும்‌, லீலைகளையும்‌ கூறுங்கள்‌.

ஷாமா : அப்படியென்றால்‌ சற்றே இங்கு அமருங்கள்‌. இக்கடவுளின்‌ (பாபா) விளையாட்டு (லீலை) வியக்கத்தக்கது. அது தங்களுக்கு முன்னமே தெரியும்‌. நான்‌ ஒரு கிராமத்துக்‌ குடியானவன்‌. ஆனால்‌ தாங்களோ அறிவுடைய குடிமகன்‌. தாங்களே இங்கு வந்துற்றது முதலாகச்‌ சிறிது அதிகமாகவே லீலைகளைக்‌ கண்டுகொண்டிருக்கிறீர்கள்‌. அவற்றை எங்ஙனம்‌ நான்‌ தங்கள்‌ முன்‌ விவரிப்பேன்‌?! நன்று இந்தாருங்கள்‌ வெற்றிலை – பாக்கு சேர்த்து தாம்பூலம்‌ (பான்விதா) போட்டுக்கொள்ளுங்கள்‌. நான்‌ உள்ளே சென்று உடுத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்‌.

சில நிமிடங்களில்‌ ஷாமா வெளியே வந்து ஹேமத்பந்த்துடன்‌ பேசத்‌ தொடங்கினார்‌. அவர்‌ சொன்னார்‌. “இந்த ஆண்டவனின்‌ (பாபா) லீலைகள்‌ அறிந்துகொள்ள இயலாதவை. அவர்தம்‌ லீலைகட்கு முடிவில்லை. யாரே அவற்றைக்‌ கண்டுகொள்ள இயலும்‌? தமது லீலைகளினால்‌ அவர்‌ விளையாடுகிறார்‌ என்றாலும்‌ அவைகளுக்குப்‌ புறம்பாகவே (அதனால்‌ பாதிக்கப்படாதவராகவேவே) இருக்கிறார்‌. நாகரீகமற்றவர்களாகிய நமக்கு என்னதான்‌ தெரியும்‌? – பாபா தாமே ஏன்‌ கதைகள்‌ சொல்லவில்லை. தங்களைப்‌ போன்ற கற்றறிந்தோரை என்போன்ற அறிவிலிகளிடம்‌ ஏன்‌ அவர்‌ அனுப்புகிறார்‌? அவர்தம்‌ வழிகள்‌ கருதுதற்கு இயலாதவை. அவைகள்‌ மனிதத்‌ தன்மை வாய்ந்தவையல்ல என்று மட்டுமே என்னால்‌ கூற இயலும்‌. இந்த முன்னுரையுடன்‌ ஷாமா தொடர்ந்தார்‌ “இப்போது என்‌ நினைவில்‌ இருக்கும்‌ ஒரு கதையை நான்‌ தங்களுக்கு விவரிக்கிறேன்‌. அதை நானே நேரிடையாக அறிவேன்‌. ஓர்‌ பக்தன்‌ எவ்வளவு தூரம்‌ நெஞ்சுரங்கொண்டவனாகவும்‌, தீர்மானமுள்ளவனாகவும்‌ இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின்‌ உடனடியான பிரதிச்செயலும்‌ இருக்கிறது. சில சமயங்களில்‌ பாபா தமது பக்தர்களைத்‌ தீவிரமாக சோதனைக்கு உட்படுத்திப்‌ பின்னர்‌ அவர்கட்கு உபதேசம்‌ (செயல்துறைக்‌ கட்டளைகள்‌) அளிக்கிறார்‌. உபதேசம்‌ என்ற வார்த்தையைக்‌ கேட்டவுடனேயே, ஹேமத்பந்திற்குத்‌ தனது மனதில்‌ ஏதோ ஒரு மின்னலைப்‌ போன்ற ஒளி பாய்ந்தது போன்றிருந்தது.

அவர்‌ உடனே சாதேவின்‌ குருசரித்திரப்‌ பாராயணக்‌ கதையை நினைவுகூர்ந்து தமது பதைபதைப்பான மனதிற்கு அமைதியளிக்கவே நிச்சயமாக பாபா தம்மை ஷாமாவிடம்‌ அனுப்பியிருக்கவேண்டும்‌ என்று எண்ணினார்‌, என்றாலும்‌ இந்த உணர்வை அடக்கிக்‌ கட்டுப்படுத்திக்கொண்டு ஷாமாவின்‌ கதைகளைக்‌ கேட்கத்‌ தொடங்கினார்‌. அவை அனைத்தும்‌ பாபா தமது பக்தர்களிடம்‌ எவ்வளவு அன்புடனும்‌, பாசமுடனும்‌ இருக்கிறார்‌ என்பதைத்‌ தெரிவிக்கின்றன. இவைகளை எல்லாம்‌ கேட்ட ஹேமத்பந்த்‌ ஒருவித மகிழ்ச்சியை எய்தலானார்‌. பிறகு பின்வரும்‌ கதையை ஷாமா கூறத்‌ தொடங்கினார்‌.

திருமத்ராதாயாய்தேஷ்முக்

ராதாபாய்‌ என்ற பெயருடைய கிழவி ஒருத்தி இருந்தாள்‌. அவள்‌ காஷாபா தேஷ்முக்‌ என்பாரின்‌ தாயாராவாள்‌. பாபாவின்‌ புகழைக்‌ கேகள்விப்பட்டு சங்கம்னேர்‌ நகர மக்களுடன்‌ அவள்‌ ஷீர்டிக்கு வந்தாள்‌.

பாபாவின்‌ தரிசனத்தைப்பெற்று மிகவும்‌ திருப்தியடைந்தாள்‌. பாபாவை மிகவும்‌ உள்ளார்ந்த அன்புடன்‌ அவள்‌ நேசித்தாள்‌. தான்‌ பாபாவைக்‌ குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து ஏதேனும்‌ உபதேசம்‌ பெறவேண்டும்‌ என்று தீர்மானித்தாள்‌. அதைத்தவிர அவளுக்கு வேறு ஒன்றும்‌ தெரியாது. பாபா அவளை ஏற்றுக்கொண்டு மந்திரமோ, உபதேசமோ அளிக்காத வரையில்‌ தான்‌ சாகும்வரை உண்ணாவிரதம்‌ இருக்கப்போவதாக உறுதிபூண்டாள்‌. தனது இருப்பிடத்தில்‌ தங்கி, மூன்று நாட்களாக உணவையும்‌, நீரையும்‌ விட்டொழித்தாள்‌.

கிழவியின்‌ இந்த மிகக்கடுமையான பரீட்சையைக்‌ கண்டு நான்‌ திகிலடைந்தேன்‌. அவள்‌ சார்பில்‌ பாபாவிடம்‌ இடையிட்டுப்‌ பரிந்து பேசினேன்‌. நான்‌ கூறினேன்‌, “தேவா, தாங்கள்‌ இவ்வாறாகத்‌ தொடங்கியிருப்பது என்ன? தாங்கள்‌ ஏராளமானவர்களை இவ்விடம்‌ ஈர்த்து இழுக்கிறீர்கள்‌. தங்களுக்கு அக்கிழவியைத்‌ தெரியும்‌, அவள்‌ மிகவும்‌ பிடிவாதமுடையவளாகவும்‌, தங்களையே முழுவதுமாகச்‌ சார்ந்தும்‌ இருக்கிறாள்‌. தாங்கள்‌ அவளை ஏற்றுக்கொண்டு உபதேசம்‌ தந்தாலொழிய சாகும்வரை உண்ணாவிரம்‌ இருப்பதாகத்‌ தீர்மானித்து இருக்கிறாள்‌. ஏதாவது மோசமாக நிகழ்ந்துவிட்டால்‌ மக்கள்‌ தங்கள்மீது பழி சுமத்துவார்கள்‌. பாபா அவளுக்கு உபதேசிக்கவில்லை. அதன்‌ விளைவாக அவள்‌ மரணமடைந்தாள்‌ என்று கூறுவார்கள்‌. எனவே அவள்மீது கருணைகூர்ந்து அவளை ஆசீர்வதியுங்கள்‌, அவளுக்கு அறிவுறுத்துங்கள்‌’. அவளது தீர்மான உறுதியைக்கண்டு பாபா அவளைக்‌ கூப்பிட்டு அனுப்பினார்‌. பின்வருமாறு அவளிடம்‌ உரையாற்றி அவளது மனப்போக்கை மாற்றினார்‌.

“ஓ! அம்மா*, ஏன்‌ தேவையற்ற சித்ரவதைக்குத்‌ தங்களை தாங்களே உட்படுத்திக்கொண்டு சாவை எதிர்நோக்குகிறீர்கள்‌? தாங்கள்‌ உண்மையிலேயே எனது தாய்‌. நான்‌ தங்களது குழந்தை. என்மேல்‌ இரக்கம்கொண்டு நான்‌ சொல்வதை முழுதும்‌ கேட்பீர்களாக. எனது சொந்தக்‌ கதையையே சொல்கிறேன்‌. அதைக்‌ கவனமாக கேட்பீர்களானால்‌, தங்களுக்கு அதனால்‌ நன்மை விளையும்‌. எனக்கு ஒரு குரு இருந்தார்‌.

* பாபா எப்போதும்‌ பெண்களை அம்மா என்றும்‌ ஆண்களை காகா, பாபா, பாவ்‌ என்றும்‌ அன்புடன்‌ அழைப்பார்‌.‌‌ அவர்‌ ஒரு மாபெரும்‌ முனிவர்‌. மிக்க கருணையுள்ளவர்‌.

நான்‌ அவருக்கு நெடுங்காலம்‌ சேவை செய்தேன்‌. பன்னெடுங்காலம்‌. எனினும்‌, அவர்‌ என்‌ காதுகளில்‌ எவ்வித மந்திரத்தையும்‌ ஓதவில்லை. அவரை ஒருபோதும்‌ விட்டுப்‌ பிரியாமல்‌ இருக்கவும்‌, அவருடனேயே தங்கியிருந்து அவருக்குச்‌ சேவை செய்யவும்‌, எப்பாடுபட்டாவது அவரிடமிருந்து சிறிது உபதேசம்‌ பெறவும்‌ எனக்குக்‌ கூரிய ஆர்வம்‌ இருந்தது. ஆனால்‌ அவருக்குத்‌ தமக்கே உரிய வழிமுறை இருந்தது. அவர்‌ என்‌ தலையை மொட்டை அடிக்கச்செய்து இரண்டு பைசாக்களைத்‌ தகஷிணையாகக்‌ கேட்டார்‌. நான்‌ அவைகளை உடனே அளித்தேன்‌. எனது குரு முழு நிறைவானவராய்‌ இருப்பதால்‌ அவர்‌ ஏன்‌ பணத்தைக்‌ கேட்க வேண்டும்‌? அப்படியாயின்‌ அவரை எங்ஙனம்‌ பற்றற்றவர்‌ என்று கூறவியலும்‌? என்று தாங்கள்‌ கேட்பீர்கள்‌ என்றால்‌, காசுகளை அவர்‌ லட்சியம்‌ செய்யவில்லை என்று நான்‌ ஒளிவு மறைவின்றி பதில்‌ கூறுவேன்‌. அவைகளைக்கொண்டு அவருக்கு ஆக வேண்டியது என்ன?

அவர்தம்‌ இரண்டு பைசாக்களாவன :

(1) உறுதியான நம்பிக்கை (நிஷ்டா)

(2) பொறுமை அல்லது விடாமுயற்சி (சூரி)

இந்த இரண்டு பைசாக்களை நான்‌ அவருக்கு அளித்தேன்‌. அவர்‌ பெரிதும்‌ மனம்‌ மகிழ்ந்தார்‌. எனது குருவிடம்‌ தஞ்சமாக நான்‌ பன்னிரெண்டு ஆண்டுகள்‌ இருந்தேன்‌. அவர்‌ என்னை வளர்த்தார்‌. உணவுக்கும்‌, உடைக்கும்‌ பஞ்சமில்லை. அவர்‌ முழுமையும்‌ அன்புடையவராக இருந்தார்‌. ஆம்‌, அவர்‌ அன்பின்‌ அவதாரமே ஆவார்‌. எங்ஙனம்‌ நான்‌ அதை விவரிக்க இயலும்‌? அவர்‌ என்னை மிகமிக அதிகமாக விரும்பினார்‌. அவரைப்போன்ற குரு அபூர்வம்‌. நான்‌, அவரை நோக்கும்போது ஆழ்ந்த தியானத்தில்‌ இருப்பதாகக்‌ காணப்பட்டார்‌. பின்னர்‌ நாங்கள்‌ இருவரும்‌ பேரின்பத்தில்‌ நிரம்பிவிடுவோம்‌. இரவும்‌, பகலும்‌ நான்‌ பசி தாகத்தை மறந்து அவரையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டு இருப்பேன்‌. அவரின்றி நான்‌ இருப்புகொள்ளாதவன்‌ ஆனேன்‌. எனக்கு, எனது தியானத்திற்கு அவரைத்தவிர வேறெவ்விதப்‌ பொருளுமில்லை. அன்றி அவருக்குப்‌ பணிவிடை செய்வதைத்‌ தவிர எனக்கு வேறெவ்வித வேலையுமில்லை. அவரே எனது ஒரே அடைக்கலம்‌. எனது மனம்‌ எப்போதும்‌ அவர்மீதே உறுதிபடுத்தப்பட்டிருந்தது.

இந்த நிஷ்டா (உறுதியான நம்பிக்கை) ஒரு பைசா தக்ஷிணையாகும்‌. சபூரி (பொறுமை அல்லது விடாமுயற்சி) என்பது மற்றொரு பைசாவாகும்‌. குருவிடம்‌ நான்‌ பொறுமையுடன்‌ மிக நீண்டகாலம்வரை சேவை செய்தேன்‌. இந்தச்‌ சபூரியானது உங்களை இவ்வுலக வாழ்க்கையென்னும்‌ பெருங்கடலைக்‌ கடப்பதற்குரிய தோணியிலேற்றி அக்கரை சேர்ப்பிக்கும்‌. மனிதனிடத்தில்‌ உள்ள ஆண்மையே சபூரி. அது பாவங்களையும்‌, வேதனைகளையும்‌ நீக்குகிறது. பல்வேறு வகைகளில்‌ பேராபத்துக்களை விலக்குகிறது. எல்லா அச்சங்களையும்‌ அப்பால்‌ அகற்றுகிறது. கடைமுடிவாக உங்களுக்கு வெற்றியளிக்கிறது. சபூரி நற்பண்புகளின்‌ சுரங்கம்‌. நல்லெண்ணங்களின்‌ கூட்டாளி. நிஷ்டாவும்‌ (நம்பிக்கை), சபூரியும்‌ (பொறுமை) ஒருவரையொருவர்‌ மிக நெருக்கமாக நேசிக்கும்‌ இரட்டைச்‌ சகோதரிகளை நிகர்த்தவை.https://wordpress.org/support/article/settings-sidebar/#permalink

என்னுடைய குரு ஒருபோதும்‌ வேறெதையும்‌ என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை. அவர்‌ என்னை ஒருபோதும்‌ புறக்கணித்ததும்‌ இல்லை. எப்போதும்‌ என்னைப்‌ பாதுகாத்தார்‌. நான்‌ அவருடன்‌ தங்கி வாழ்ந்தேன்‌. சில சமயம்‌ அவரைவிட்டுப்‌ பிரிந்து வாழ்ந்தேன்‌. எனினும்‌ நான்‌ ஒருபோதும்‌ அவர்தம்‌ அன்புடைமைக்குத்‌ தேவையையோ, அன்பின்மையையோ கண்டதில்லை. தாய்‌ ஆமையானது தனது இளங்குட்டிகள்‌ தன்‌ அருகில்‌ இருப்பினும்‌, தன்னை விட்டு நீங்கி ஆற்றின்‌ அக்கரையில்‌ இருப்பினும்‌ தனது அன்புப்‌ பார்வையால்‌ பேணிவளர்க்கும்‌. அதேவிதமாக, அவர்‌ தம்முடைய கண்ணோட்டத்தினாலேயே எப்போதும்‌ என்னைப்‌ பாதுகாத்தார்‌. ஓ! அன்னையே, எனது குரு எனக்கு எவ்வித மந்திரத்தையும்‌ போதிக்கவில்லை. பின்னர்‌ நான்‌ எங்ஙனம்‌ தங்களது காதுகளில்‌ மந்திரத்தை ஓதமுடியும்‌? குருவின்‌, ஆமையினத்தை நிகர்த்த அன்புக்‌ கண்ணோட்டம்‌ ஒன்றே நமக்கு மகிழ்ச்சியை நல்குகிறது. எவரிடமிருந்தும்‌ மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதீர்கள்‌. என்னையே உங்களது எண்ணங்கள்‌, செயல்கள்‌ இவற்றின்‌ ஒரே குறிக்கோளாக அமைத்துக்‌ கொள்ளுங்கள்‌. சந்தேகம்‌ ஏதுமின்றி நீங்கள்‌ நிச்சயம்‌ பரமார்த்திகத்தை (வாழ்வின்‌ ஆன்மிகக்‌ குறிக்கோளை) எய்துவீர்கள்‌. என்னை உங்களது முழுமனத்தோடு நோக்குங்கள்‌ பதிலாக நானும்‌ அங்ஙனமே தங்களை நோக்குவேன்‌.

இம்மசூதியில்‌ அமர்ந்துகொண்டு நான்‌ உண்மையையே பேசுகிறேன்‌. உண்மையைத்‌ தவிர வேறெதுவும்‌ பேசவில்லை. சாதனைகள்‌ ஏதும்‌, ஆறு சாஸ்திரங்களில்‌ கைதேர்ந்த அறிவு ஏதும்‌ தேவை இல்லை. உங்களது குருவினிடத்தில்‌ நம்பிக்கையும்‌, பற்றுறுதியும்‌ கொள்ளுங்கள்‌. குருவே தனி ஒருவரான நடத்துனர்‌, இயக்குனர்‌ என நம்புங்கள்‌. தனது குருவின்‌ பெருமையை அறிபவன்‌, அவரையே ஹரிஹர பிரம்மமென்ற திரிமூர்த்தி அவதாரமென்று கருதுபவன்‌, ஆசீர்வதிக்கப்பட்டவன்‌.” இவ்வாறாக அறிவுறுத்தப்பட்டு, கிழவி உடன்பட்டாள்‌. அவள்‌ பாபாவை வணங்கி உண்ணாவிரதத்தைக்‌ கைவிட்டாள்‌.

இக்கதையைக்‌ கவனத்துடனும்‌, கருத்துடனும்‌ கேட்டுக்கொண்டிருந்த ஹேமத்பந்த்‌ அதன்‌ குறிப்பு நுட்பத்தையும்‌, பொருத்தத்தையும்‌ குறித்துப்‌ பெருமளவு ஆச்சரியத்தில்‌ மூழ்கினார்‌. பாபாவின்‌ இவ்வதிசய லீலையைக்‌ கண்டுகொண்டு உச்சி முதல்‌ உள்ளங்கால்‌ வரை அவர்‌ உருகினார்‌. மகிழ்ச்சிப்‌ பெருக்கால்‌ பொங்கி வழியலானார்‌. அவர்தம்‌ தொண்டை அடைத்தது. ஒரு வார்த்தை கூட அவரால்‌ பேச முடியவில்லை. ஷாமா இந்நிலையில்‌ அவரை நோக்கி, “தங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன்‌ மெளனமாகி விட்டீர்கள்‌? பாபாவின்‌ கணக்கற்ற லீலைகள்‌ இன்னும்‌ எவ்வளவை நான்‌ விவரிக்க வேண்டும்‌?” என்று கேட்டார்‌. இது தருணம்‌ மத்தியான வழிபாடும்‌, ஆரத்தி சடங்கும்‌, மசூதியில்‌ ஆரம்பமாகிவிட்டன என்பதை அறிவிக்கும்‌ வகையில்‌ மசூதியில்‌ இருக்கும்‌ மணி அடிக்கத்‌ தொடங்கியது. எனவே ஷாமாவும்‌, ஹேமத்பந்தும்‌ மசூதியை நோக்கி விரைந்தனர்‌. பாபு சாஹேப்‌ ஜோக்‌ அப்போதுதான்‌ வழிபாட்டைத்‌ துவங்கி இருந்தார்‌. பெண்கள்‌ மசூதியினுள்ளே மேல்தளத்திலும்‌ ஆண்கள்‌ கீழே உள்ள திறந்தவெளித்‌ தாழ்வாரத்திலும்‌ நின்றுகொண்டு ஆரத்தியைக்‌ கோஷத்துடன்‌ எல்லோரும்‌ பலமாக மேளங்கள்‌ முழங்கப்‌ பாடிக்கொண்டிருந்தனர்‌. ஷாமா தன்‌ கூடவே ஹேமத்பந்தையும்‌ இழுத்துக்கொண்டு மேலே சென்றார்‌. பாபாவுக்கு வலதுபுறம்‌ அவரும்‌, ஹேமத்பந்த்‌ முன்னாலும்‌ அமர்ந்தனர்‌. அவர்களைக்‌ கண்டு ஷாமாவிடமிருந்து கொண்டுவந்த தகஷிணையைக்‌ கொடுக்கும்படி ஹேமத்பந்த்திடம்‌ கேட்டார்‌.

ஹேமத்பந்த்‌ அவ்விடம்‌ நேரே சென்றிருந்ததாகவும்‌ ஷாமா ரூபாய்க்குப்‌ பதிலாக நமஸ்காரங்களை அளித்ததாகவும்‌ அவர்‌ அங்கேயே நேரில்‌ இருப்பதாகவும்‌ கூறினார்‌. பாபா அதற்கு “நன்று, தாங்கள்‌ இருவரும்‌ சம்பாஷித்தீர்களா? அப்படி என்றால்‌ நீங்கள்‌ பேசியவை அனைத்தையும்‌ குறித்து எனக்குச்‌ சொல்லுங்கள்‌” என்றார்‌. மணியோசை, மேளம்‌, கோஷ்டிகானம்‌ இவற்றைப்‌ பொருட்படுத்தாது ஹேமத்பந்த்‌ அவர்கள்‌ பேசியதைக்‌ கூற ஆவலாய்‌ இருந்தார்‌. அதை எடுத்துரைக்கவும்‌ ஆரம்பித்தார்‌. பாபாவும்‌ அதைக்‌ கேட்பதற்கு ஆவலாய்‌ இருந்தார்‌. எனவே அவர்‌ தமது திண்டைவிட்டு நீங்கி முன்னால்‌ சாய்ந்துகொண்டார்‌. தாம்‌ உரையாடியவை எல்லாம்‌ மிகவும்‌ மகிழ்வளிக்கின்றவை. குறிப்பாக கிழவியின்‌ கதை மிகமிக அற்புதமானது என்றும்‌, அதைச்‌ செவிமடுத்ததன்‌ பொருட்டு அவர்‌ பாபாவின்‌ லீலை விவரிக்க இயலாதது என்றும்‌, கதை என்ற புறத்தோற்றத்தில்‌ பாபா தம்மையே உண்மையில்‌ ஆசீர்வதித்திருப்பதாகத்‌ தாம்‌ நினைப்பதாகக்‌ கூறினார்‌. பின்னர்‌ பாபா “கதை அற்புதமானது, எங்ஙனம்‌ நீங்கள்‌ ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்‌? நான்‌ உங்களிடமிருந்து எல்லாவற்றையும்‌ விளக்கமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன்‌. எனவே அவை அனைத்தையும்‌ குறித்து எனக்கு இப்போது சொல்லுங்கள்‌” என்றார்‌. ஹேமத்பந்த்‌ தான்‌ சற்றுமுன்னர்‌ கேட்ட தனது உள்ளத்தில்‌ நிலையான முத்திரையை ஏற்படுத்திய கதையை முழுக்க விவரித்தார்‌. இதைக்கேட்டு பாபா மிகவும்‌ மகிழ்ச்சியுற்றார்‌. மேலும்‌ அவரை நோக்கி “இக்கதை உமதுள்ளத்தில்‌ பதிவுற்றதா? அதன்‌ குறிப்பு நுட்பத்தைப்‌ பிடித்துக்கொண்டீரா?!” என்றார்‌. அவர்‌ “ஆம்‌ பாபா! எனது மனத்தின்‌ பதைபதைப்பு மறைந்தொழிந்தது. எனக்கு உண்மையான சாந்தியும்‌, அமைதியும்‌ கிடைத்தன. நான்‌ உண்மையான வழியை அறியப்பெற்றேன்‌” என்றார்‌.

பாபா பின்வருமாறு உரைத்தார்‌. “எனது நிகழ்முறை மிகவும்‌ தனித்தன்மை வாய்ந்தது. இக்கதையை நன்றாக ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்‌. அது மிகவும்‌ பயனுள்ளதாக இருக்கும்‌. அத்மாவின்‌ ஞானத்தை (அனுமுதி) அடைவதற்குத்‌ தியானம்‌ இன்றியமையாதது. அதை இடையறாது பயிற்சித்தீர்களானால்‌ விருத்திகள்‌ (எண்ணங்கள்‌) அமைதிப்படுத்தப்படூம்‌. அசைகள்‌ அற்ற நிலையில்‌ இருந்துகொண்டு, நீங்கள்‌ அனைத்துயிர்களிலும்‌ இருக்கின்ற ஆண்டவரை தியானியுங்கள்‌. மனது ஒருமுகப்படுத்தப்பட்ட பின்பு நமது குறிக்கோள்‌ எய்தப்பட்டுவிடும்‌. ஞானமெனும்‌ (சத்து) பண்பே திருவுருக்கொண்டது எனவும்‌, உணர்வுத்‌ திரளும்‌ பேரானந்தமுமாகிய எனது உருவமற்ற இயல்பை எப்போதும்‌ தியானம்‌ செய்யுங்கள்‌. இதைச்‌ செய்யத்‌ தங்களால்‌ இயலாவிடில்‌ இங்கே இரவும்‌, பகலும்‌ காண்பதைப்‌ போன்று, உச்சி முதல்‌ உள்ளங்கால்‌ வரையுள்ள எனது ரூபத்தைத்‌ தியானம்‌ செய்யுங்கள்‌. இதைத்‌ தாங்கள்‌ செய்துகொண்டே போகும்போது தங்களின்‌ விருத்திகள்‌ (எண்ணங்கள்‌) ஒரே இலக்கில்‌ குவிக்கப்படும்‌. தியானம்‌ செய்பவர்‌, தியானம்‌, தியானிக்கப்படும்‌ பொருள்‌ இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும்‌. தியானம்‌ யுரிபவர்‌ உச்ச உணர்ச்சித்திரளுடன்‌ ஒன்றி, பிரம்மத்துடன்‌ கலந்து ஐக்கியமாய்‌ விடுவார்‌.

தாய்‌ ஆமை, நதியின்‌ ஒரு கரையிலும்‌ அதன்‌ குட்டிகள்‌ மறுகரையிலும்‌ இருக்கின்றன. அவைகளுக்கு அது பாலோ, உஷ்ணமோ அளிப்பதில்லை. அதனுடைய கண்ணோட்டம்‌ ஒன்றே அவைகளைப்‌ போஷிக்கிறது. குட்டிகள்‌ தமது தாயாரை ஞாபகத்தில்‌ கொள்ளுதலைத்‌ (தியானிப்பதை) தவிர வேறொன்றும்‌ செய்வதில்லை. தாய்‌ ஆமைகளின்‌ கண்ணோட்டம்‌ குட்டிகளுக்கு, காலூன்றிப்‌ பெய்யும்‌ அமுதமழையாகவும்‌, ஊட்டப்பண்பிற்கும்‌ மகிழ்ச்சிக்கும்‌ உள்ள ஒரே தோற்றுவாயாகவும்‌ இருக்கிறது. குருவுக்கும்‌, சீடர்களுக்கும்‌ இடையிலுள்ள உறவும்‌ அத்தகையதேயாகும்‌”.

பாபா இம்மொழிகளை உதிர்த்து முடித்த பின்பு ஆரத்தி கோஷ்டிகானம்‌ முடிவுற்றது. அனைவரும்‌ உரக்க ஒரே குரலில்‌ “சச்சிதானந்த சொரூபியாய்‌ இருக்கிற சத்குரு சாயிநாத்‌ மஹராஜுக்கு ஜெய்‌” என்று கூவினார்கள்‌.

 அன்பார்ந்த வாசகர்களே! நாமும்‌ இந்த நேரம்‌ மசூதியில்‌ கூட்டத்துடன்‌ நின்றுகொண்டிருப்பதாக நினைத்துக்கொள்வோம்‌. ஜயஜய கோஷத்தில்‌ நாமும்‌ அவர்களுடன்‌ பங்குகொள்வோம்‌.

ஆரத்திச்‌ சடங்கு முடிவடைந்த பின்னர்‌ பிரசாதம்‌ வினியோகிக்கப்பட்டது. வழக்கம்போல்‌ பாபு சாஹேப்‌ ஜோக்‌ முன்னே வந்து பாபாவை வணங்கியபின்‌ அவரின்‌ உள்ளங்கை நிறையக்‌ கற்கண்டை அளித்தார்‌. பாபா இவை முழுவதையும்‌ ஹேமத்பந்தின்‌ கைகளில்‌ திணித்து அவரிடம்‌, “இக்கதையை உள்ளத்தில்‌ இருத்தி நன்றாக நினைவில்‌ வைத்துக்கொள்வீர்களேயானால்‌ தங்களதூ நிலையும்‌ கற்கண்டைப்‌ போலவே சுவையுள்ளதாகும்‌. உங்களது எல்லா விருப்பங்களும்‌ நிறைவேற்றப்படும்‌. நீங்களும்‌ சந்தோஷமாய்‌ இருப்பீர்கள்‌!” என்று கூறினார்‌. ஹேமத்பந்த்‌ பாபாவின்‌ முன்னால்‌ பணிந்து வணங்கி “இவ்வாறே எனக்கு அனுகூலம்‌ செய்யுங்கள்‌. என்னை எப்போதும்‌ ஆசீர்வதித்துக்‌ காப்பாற்றுங்கள்‌” என்று கெஞ்சிக்‌ கேட்டுக்கொண்டார்‌. பாபா அதற்கு “இக்கதையைக்‌ கேட்டு, அதனைக்‌ குறித்து தியானித்து, அதன்‌ மெய்க்கருத்தை ஜீரணித்துக்‌ கொள்ளுங்கள்‌. அப்போது உங்களிடத்திருந்து தாமே உருவெளிப்படுத்திக்‌ காட்டுகின்ற ஆண்டவரை எப்போதும்‌ ஞாபகமூட்டித்‌ தியானித்துக்கொண்டிருப்பீர்கள்‌” என்று பதிலளித்தார்‌.

அன்பான பக்தர்களே! அப்போது ஹேமத்பந்த்‌ கற்கண்டுப்‌ பிரசாதத்தைப்‌ பெற்றார்‌. நாமும்‌ இப்போது கற்கண்டுப்‌ பிரசாதம்‌ அல்லது இக்கதையின்‌ அமிர்தத்தைப்‌ பெறுவோம்‌. அதை நம்‌ உளநிறைவடையும்வரை பருகுவோம்‌. அதைத்‌ தியானிப்போம்‌. அதை ஜீரணித்துக்கொள்வோம்‌. பாபாவின்‌ அருளினால்‌ வலிமையுடனும்‌, மகிழ்ச்சியுடனும்‌ இருப்போம்‌. ஆமென்‌. பத்தொன்பதாம்‌ அத்தியாயத்தின்‌ இறுதியில்‌ ஹேமத்பந்த்‌ மற்றும்‌ சில விஷயங்களைப்பற்றிக்‌ கூறியிருக்கிறார்‌. அவைகள்‌ கீழே தரப்பட்டுள்ளன.

நமது குணத்தைப்பற்றி பாபாவின்அறிவுரை

பின்வரும்‌ பாபாவின்‌ மொழிகள்‌ பொதுவானவை. விலைமதிக்க முடியாதவை. அவைகள்‌ மனதில்‌ இருத்தப்பட்டு அதற்கேற்பச்‌ செயல்படுத்தப்பட்டால்‌ எப்போதும்‌ உங்களுக்கு நன்மை அளிக்கும்‌. “ஏதேனும்‌ உறவோ, தொடர்போ இல்லாவிடில்‌ ஒருவரும்‌ எங்கும்‌ செல்லுவதில்லை, ஏதேனும்‌ ஜீவராசிகளோ மனிதர்களோ உங்களிடம்‌ வரநேர்ந்தால்‌ அவர்களைப்‌ பண்பின்றி விரட்டிவிட வேண்டாம்‌. அவர்களை நன்றாக வரவேற்று உரிய மரியாதையுடன்‌ நடத்துங்கள்‌. தாகமாய்‌ இருப்போர்க்குத்‌ தண்ணீர்‌ கொடுத்தபோதும்‌, பசியாய்‌ இருப்போர்க்கு உணவு அளித்தபோதும்‌, ஆடையற்றவர்களுக்கு ஆடையளித்தபோதும்‌, உட்காருவதற்கும்‌, இளைப்பாறுவதற்கும்‌ உங்களது திண்ணையை மற்றவர்க்கு அளித்தபோதும்‌ ஸ்ரீஹரி நிச்சயம்‌ மகிழ்‌வெய்துகிறார்‌.

யாராவது உங்களிடம்‌ பணம்‌ கேட்டு உங்களுக்கு கொடுக்க மனதில்லாமல்‌ இருந்தால்‌ கொடுக்காதீர்கள்‌. ஆனால்‌ அவரைப்‌ பார்த்து நாயைப்‌ போன்று குரைக்க வேண்டாம்‌. யாரேனும்‌ நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராகக்‌ கூறட்டும்‌, ஆனால்‌ கசப்பாக எவ்விதத்திலும்‌ அவர்களுக்கு பதில்‌ அளிக்கும்படியாக சீற்றங்கொள்ளாதீர்கள்‌.

இவ்வாறான விஷயங்களை எப்போதும்‌ சகித்துக்கொண்டிருப்பீர்களேயானால்‌ நீங்கள்‌ நிச்சயம்‌ மகிழ்ச்சி அடைவீர்கள்‌. உலகம்‌ தலைகீழாக மாறட்டும்‌. நீங்கள்‌ இருந்த இடத்திலேயே இருங்கள்‌. உங்கள்‌ இருப்பிடத்தில்‌ நின்றுகொாண்டோ வசித்துக்ககொண்டோ அனைத்து விஷயங்களையும்‌ உங்கள்‌ முன்னர்‌ கடந்து செல்லும்‌ காட்சியாக அமைதியுடன்‌ பார்த்துக்கொண்டிருப்பீர்களாக! உங்களிடமிருந்து என்னைப்‌ பிரிக்கும்‌ வேற்றுமைச்சுவரை இடித்து விடுங்கள்‌. பின்னர்‌ நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும்‌, திறந்தும்‌ இருக்கும்‌. ‘நான்‌’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப்‌ பிரிக்கும்‌ தடையரணாரகும்‌. அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக்கலத்தல்‌ அல்லது ஐக்கியமாதல்‌ இயலாது.

கடவுளே சகலத்திற்கும்‌ ஒரே உரிமையாளர்‌ ‘அல்லா மாலிக்‌’. வேறொருவரும்‌ நமது பாதுகாவலரல்ல. அவர்‌ வேலைசெய்யும்‌ முறைமை அசாதாரணமானது, விலை மதிக்க முடியாதது. அறிவாலறிய முடியாதது. அவரது சங்கல்பமே ஈடேறும்‌. அவர்‌ நமக்கு வழிகாட்டுவார்‌. நமது உள்ளத்தின்‌ ஆசைகளைப்‌ பூர்த்தி செய்வார்‌. ருணானுபந்தத்தின்‌ (முன்ஜென்மத்தின்‌ உறவு) மூலமாகவே நாம்‌ இணைந்துள்ளோம்‌. ஒருவருக்கொருவர்‌ அன்பாயிருந்தும்‌, சேவைசெய்தும்‌ நாம்‌ மகிழ்ச்சியுடனிருப்போம்‌. எவன்‌ வாழ்க்கையின்‌ மிகமிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன்‌ இறவாப்புகழுடையவன்‌, மகிழ்ச்சியுடையவன்‌. மற்றவர்‌ எல்லாம்‌ வெறுமனே உளதாயிருக்கிறார்கள்‌ அல்லது மூச்சுவிடும்வரை வாழ்ந்திருக்கிறார்கள்‌.

நல்ல எண்ணங்களின்‌ அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல்‌

நல்ல எண்ணங்களை சாயிபாபா எங்ஙனம்‌ ஊக்குவித்தார்‌ என்பதை அறிவது சுவாரசியமானது. அன்புடனும்‌, பக்தியுடனும்‌ முழுமையாக உங்களை நீங்கள்‌ அவரிடம்‌ சரணாகதியாக்கிக்கொள்ள வேண்டும்‌. பின்னர்‌ எவ்வளவேர விஷயங்களில்‌ அடிக்கடி அவர்‌ உங்களுக்கு உதவி செய்வதைக்‌ காண்பீர்கள்‌. தூக்கத்திலிருந்து எழுந்த உடனே உங்களுக்கு ஏதாகிலும்‌ ஒரு நல்ல எண்ணம்‌ உதிக்கின்றபோது அதையே பின்னர்‌ பகற்பொழுதில்‌ உள்முதிர்வுற அனுசரித்தால்‌ உங்களது புத்தியின்‌ திறம்‌ மலர்ந்து வெளிப்பட்டு மனது சாந்தியடையும்‌ என்று ஒரு முனிவர்‌ கூறியிருந்தார்‌.

ஹேமத்பந்த்‌ இதை முயற்சிக்க விரும்பினார்‌. ஒரு புதன்கிழமை இரவு படுக்கப்புகும்முன்‌ அவர்‌ சிந்தித்தார்‌. “நாளை வியாழக்கிழமை ஒரு புனிதமான நாள்‌, ஷீர்டியும்‌ மிகவும்‌ புனிதமான இடம்‌. எனவே நான்‌ நாளை முழுவதும்‌ ராமநாமத்தை நினைவூட்டிக்கொள்வதிலும்‌, போற்றுவதிலும்‌ கழிப்பேன்‌” என்றவாறு அவர்‌ உறங்கினார்‌. அடுத்தநாள்‌ காலை அவர்‌ துயில்‌ நீங்கி எழுந்தபோது எவ்வித முயற்சியும்‌ இன்றி ராமநாமத்தை நினைவுகூர்ந்தார்‌. தமது காலைக்கடமைகளை முடித்துக்கொண்டபின்‌, மலர்களுடன்‌ பாபாவைக்‌ காணச்சென்றார்‌. தீக்ஷித்‌ வாதாவிலிருந்து புறப்பட்டு, பூட்டி வாதாவை (தற்போதைய சமாதி மந்திர்‌) கடந்துகொண்டிருக்கும்‌ அதே தருணத்தில்‌ பாபாவுக்கு முன்னால்‌, மசூதியில்‌ ஒளரங்காபாத்கர்‌ என்னும்‌ ஒருவரால்‌ இனிமையாகப்‌ பாடப்படுகின்ற ஓர்‌ அழகிய பாடலைக்‌ கேட்டார்‌.

அது ஏக்நாத்தின்‌ ‘குரு கிருபாஞ்ஜன்‌ பாயோ மேரே பாயி…!’ என்ற பாடல்‌, அப்பாடலில்‌ குருவின்‌ கடாக்ஷம்‌ என்னும்‌ ரூபத்தில்‌ அஞ்சனம்‌ அவருக்குக்‌ கிடைத்தது என்றும்‌ அது அவரின்‌ பார்வையைத்‌ திறந்துவிட்டு அவருக்கு ராமரை அகத்தும்‌, புறத்தும்‌, உறக்கத்திலும்‌, கனவிலும்‌, விழிப்பு நிலையிலும்‌, எவ்விடத்தும்‌ காணும்படிச்‌ செய்தது என்றும்‌ கூறினார்‌. எவ்வளவோ பாடல்கள்‌ இருக்கின்றன. பின்னர்‌ ஏன்‌ இக்குறிப்பிட்ட பாட்டு பாபாவின்‌ பக்தரான ஓளரங்காபாத்கரினால்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்‌. பகற்பொழுதில்‌ ராமநாமத்தை இடைவிடாமல்‌ பாடவேண்டும்‌ என்ற ஹேமத்பந்தின்‌ தீர்மானத்திற்கு ஊட்டமளிக்க வேண்டும்‌ என்று ஏற்பாடு செய்யப்பட்டதல்லவா தனித்திறம்‌ வாய்ந்த இந்நிகழ்வுப்‌ பொருத்தம்‌!

உபதேசங்களின்விதங்கள்‌ – அவதூறு பேசுவோர்‌ (புறங்கூறூவோர்‌) கண்டிக்கப்படுதல்

அறிவுரை வழங்குவதற்கு, சாயிபாபாவிற்கு எத்தகைய சிறப்பான இடமோ, குறிப்பிட்ட நேரமோ தேவையிருக்கவில்லை. சந்தர்ப்பம்‌ நேரிட்டபோதெல்லாம்‌ தாராளமாக அவற்றை அவர்‌ வழங்கினார்‌. ஒருமுறை பாபாவின்‌ பக்தனொருவன்‌ வேறொருவரை அவர்‌ அறியாதபடி மற்ற ஜனங்களின்‌ முன்னிலையில்‌ திட்டினான்‌. தனது சகோதரரின்‌ நன்மைகளையெல்லாம்‌ புறத்தொதுக்கி, அவரின்‌ குறைபாடுகள்‌ குறித்து கேட்போர்கள்‌ அருவருப்படையும்படியாக பழித்துப்‌ பேசினான்‌.

அவசியமின்றி மற்றவர்களைப்‌ புறங்கூறுவது மக்களுக்குரிய ஒரு மனப்பாங்காக இருப்பதைப்‌ பொதுவாக நாம்‌ காண்கிறோம்‌. முனிவர்கள்‌ இந்தப்‌ யுறங்கூறுதலை வேரறாரு கோணத்திலிருந்து நோக்குகிறார்கள்‌. அழுக்கை நீக்குவதற்குப்‌ பல வழிகள்‌ இருக்கின்றன. மண்‌, நீர்‌, சோப்பு முதலானவை. ஆனால்‌ புறங்கூறுபவனுக்கோ அவனுக்கே உரித்தான வழி இருக்கிறது. அவன்‌ மற்றவர்களது அழுக்கை (குறைபாடுகளை) தனது நாவினால்‌ அகற்றி நீக்குகிறான்‌. ஒருவகையில்‌ அவன்‌ தன்னால்‌ திட்டப்படுபவனுக்கே உதவுகிறான்‌. இதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்‌. புறங்கூறுபவனைத்‌ திருத்துவதற்கு சாயிபாபாவுக்கு அவருக்கே உரியதான வழி இருக்கிறது.

அவர்‌ தமது நிறைபேரறிவினால்‌ அந்த புறம்கூறுவோன்‌ செயலை அறிந்திருந்தார்‌. மதியம்‌ அவர்‌ அவனை லெண்டித்‌ தோட்டத்திற்கருகில்‌ பார்த்தபோது, வேலிக்கருகில்‌ இருந்த மலத்தை உண்ணும்‌ ஒரு பன்றியை அவனுக்குச்‌ சுட்டிக்காண்பித்து, “பார்‌, அது எத்தகைய சுவைமணச்‌ சிறப்புடன்‌ மலத்தைப்‌ பேராவலுடன்‌ விழுங்குகிறது, உனது நடத்தையும்‌ அத்தகையதே உனது தோழர்களை நீ மனதாரத்‌ திட்டிக்கொண்டே இருக்கிறாய்‌, பல்வேறு நல்வினைகளைச்‌ செய்ததன்‌ பலனாக நீ மனிதனாகப்‌ பிறந்திருக்கிறாய்‌. இவ்வாறு நீ நடந்துகொண்டால்‌ ஷீர்டி உனக்கு எவ்விதத்திலாவது உதவி செய்யுமா?” என்று கேட்டு அவனுக்கு அறிவுரை வழங்கினார்‌. அப்பக்தன்‌ இப்பாடத்தை உள்ளத்தில்‌ ஏற்றுக்கொண்டு சென்றான்‌ என்று சொல்லத்‌ தேவையில்லை.

இவ்விதமாக பாபா அவசியம்‌ நேரிட்டபோதெல்லாம்‌ அறிவுரைகளை வழங்கிக்‌ கொண்டேயிருந்தார்‌. இவைகள்‌ நமது மனதில்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்படி செயலாற்றப்பட்டால்‌ ஆன்மிக லட்சியம்‌ (அனுபூதி) நெடுந்தொலைவில்‌ இல்லை. என்‌ ஹரி (கடவுள்‌) இருந்தால்‌ அவர்‌ எனது கட்டிலிலேயே எனக்கு உணவளிப்பார்‌ என்னும்‌ ஒரு பழமொழி இருக்கிறது. உணவு, உடை விஷயத்தில்‌ மட்டுமே இப்பழமொழி உண்மை. ஆனால்‌ இதை நம்பி எவனாகிலும்‌ அமைதியாக அமர்ந்துகொண்டு ஆன்மிக விஷயங்களில்‌ ஒன்றும்‌ செய்யாமல்‌ இருந்தால்‌ அவன்‌ படுவீழ்ச்சி எய்துவான்‌. ஆன்ம உணர்வடைய தன்னைத்தான்‌ தனக்கு இயலும்‌ உச்ச அளவு செயலில்‌ முனைவித்துக்கொள்ள வேண்டும்‌. எவ்வளவு அதிகம்‌ அவன்‌ பெருமுயற்சி கொள்கிறானோ அவ்வளவு அதிகம்‌ அவனுக்கு நல்லது.

பாபா தாம்‌ நிலம்‌, காற்று, நாடு, உலகம்‌, ஒளி, மோக்ஷம்‌ ஆகியவை எங்கணும்‌ நிறைந்திருக்கும்‌ சர்வவியாபி என்றும்‌ தாம்‌ ஒரு வரையறை உடையவரல்ல என்றும்‌ கூறினார்‌. பாபா மூன்றரை முழ உயரமுள்ள அவரின்‌ உடம்பே என்று எண்ணுபவர்களின்‌ தவறான கருத்தை நீக்குதற்பொருட்டாக அவர்‌ இந்த ரூபத்தில்‌ தாமே அவதரித்துக்கொண்டார்‌. இரவும்‌ பகலும்‌ எந்த பக்தனாவது பூர்ண அத்மசரணாகதியூடன்‌ அவர்‌ மீதே தியானம்‌ புரிவானாயின்‌, அவன்‌ அவருடன்‌ இரண்டற இனிப்பும்‌ – சர்க்கரையும்‌ போன்றும்‌, அலையும்‌ – கடலும்‌ போன்றும்‌, கண்ணும்‌ – ஒளியும்‌ போன்றும்‌ முழுமையான ஐக்கியத்தைத்‌ துய்த்துணர்வான்‌. பிறப்பு – இறப்பு என்னும்‌ சுழலை ஒழித்து அமைதியுற வேண்டியவன்‌ நேர்மையான வாழ்க்கை நடத்த வேண்டும்‌. அமைதியாகவும்‌, கட்டுப்பட்ட மனத்துடனும்‌ இருக்க வேண்டும்‌. யாரையும்‌ புண்படுத்தும்படியாக வெடுக்கென்று பேசக்கூடாது. எப்போதும்‌ நல்வினைகளில்‌ தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்‌. தனது கடமைகளைச்‌ செய்யவேண்டும்‌. தானே உள்ளத்தாலும்‌, உயிராலும்‌ அவரிடம்‌ சரணாகதியடைய வேண்டும்‌. அதன்‌ பின்னர்‌ அவன்‌ எதற்கும்‌ பயப்பட வேண்டியதில்லை. அவரையே முழுமையாக நம்புபவனும்‌ அவர்தம்‌ லீலைகளை கேட்டு அதையே விவரமாக எடுத்துக்‌ கூறுபவனும்‌ வேறெதைப்பற்றியும்‌ சிந்திக்காதவனும்‌ ஆத்மானுபூதியை அடைவது உறுதி.

பாபா தமது பெயரையே நினைவில்‌ வைக்கும்படியும்‌ தம்மிடமே சரணாகதி அடையும்படியும்‌ பலரைக்‌ கேட்டுக்கொண்டார்‌. ஆனால்‌ தாங்கள்‌ யார்‌? (நான்‌ யார்‌ விசாரணை) என்று அறிய விரும்பியவர்களுக்கு ஸ்ரவணத்தையும்‌ (கற்றல்‌), மனனத்தையும்‌ (தியானம்‌) அறிவுறுத்தினார்‌. சிலரைக்‌ கடவுள்‌ பெயரை நினைவில்‌ வைத்துக்கொள்ளும்படியும்‌, சிலரை அவரது லீலைகளைக்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கும்படியும்‌, சிலரைத்‌ தமது பாதபூஜை செய்யும்படியும்‌, சிலரை அத்யாத்ம ராமாயணம்‌, ஞானேஷ்வரி மற்றும்‌ பிற திருமுறை நூல்களைப்‌ படிக்கும்படியும்‌ அறிவுறுத்தினார்‌. சிலரைத்‌ தமது பாதத்தடியில்‌ அமரும்படி இருத்திவைத்தார்‌. சிலரைக்‌ கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார்‌. சிலரை விஷ்ணுவின்‌ ஆயிரம்‌ நாமங்களை ஜபம்‌ செய்யும்படியும்‌, மற்றும்‌ சிலரை சாந்தோக்ய உபநிஷதம்‌, கீதையைக்‌ கற்கும்படியாகவும்‌ கூறினார்‌. அவர்தம்‌ உபதேசங்களுக்கு எவ்வித வரையறையோ கட்டுப்பாடோ கிடையாது. சிலருக்கு அதை நேரிடையாகவே கொடுத்தார்‌. மற்றும்‌ சிலருக்கு கனவில்‌ காட்சிகள்‌ மூலம்‌ அளித்தார்‌.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாய்‌ இருந்த ஒருவரின்‌ கனவில்‌ தோன்றி அவரது மார்பில்‌ உட்கார்ந்து அழுத்தி, மதுவைத்‌ தொடுவதில்லை என்று அவர்‌ சத்தியம்‌ செய்துகொடுத்த பின்பு அவரை விட்டகன்றார்‌. சிலருக்கு கனவில்‌ ‘குரு பிரம்மா.. குரு விஷ்ணு..’ போன்ற மந்திரங்களை விளக்கினார்‌. ஹடயோகம்‌ பழகிக்கொண்டிருந்த பக்தர்‌ ஒருவருக்கு ஹடயோகப்‌ பயிற்சிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்‌ என்றும்‌, அமைதியுடன்‌ அமர்ந்து பொறுமையாய்‌ (சபூரி) இருக்கவேண்டும்‌ என்றும்‌ சொல்லியனுப்பினார்‌. அவரது எல்லா வழிகளையும்‌, செயல்முறைகளையும்‌ விவரிக்க இயலாது. சாதாரண உலக விவகாரங்களில்‌ தமது செயல்களால்‌ முன்‌ உதாரணங்கள்‌ அமைத்தார்‌. அவைகளில்‌ ஒன்று கீழே தரப்பட்டிருக்கிறது.

உழைப்புக்குக்கூலி

ஒருநாள்‌ மத்தியான வேளையில்‌ ராதாகிருஷ்ணமாயின்‌ வீட்டிற்கு அருகில்‌ பாபா வந்து “எனக்கு ஒரு ஏணி கொண்டுவாருங்கள்‌?” என்று கூறினார்‌. சிலர்‌ அதைக்‌ கொண்டுவந்து பாபா குறிப்பிட்டபடி அதை ஒரு வீட்டுச்‌ சுவரில்‌ சாய்த்து வைத்தனர்‌. வாமன்‌ கோந்த்கருடைய வீட்டுக்‌ கூரையின்‌ மீது ஏறி, ராதா கிருஷ்ணமாயின்‌ கூரையின்‌ மீது நடந்துசென்று, மற்றொரு மூலையில்‌ இருந்து கீழே இறங்கினார்‌. பாபா எந்தக்‌ குறிக்கோளுடன்‌ இருந்தார்‌ என்பதை ஒருவரும்‌ அறிய இயலவில்லை. மலேரியா காய்ச்சலால்‌ ராதாகிருஷ்ணமாயி நடுங்கிக்கொண்டிருந்தாள்‌. அதை ஓட்டி விரட்டுதற்‌ பொருட்டு அவர்‌ மேலே ஏறியிருக்கலாம்‌. கீழே இறங்கினவுடனே ஏணியைக்‌ கொண்டு வந்தவர்களுக்கு பாபா இரண்டு ரூபாய்‌ கொடுத்தார்‌. 

சிலர்‌ தைரியத்துடன்‌ பாபாவை ஏன்‌ அவர்‌ இவ்வளவு அதிகம்‌ கொடுத்தார்‌ என்று கேட்டனர்‌. அதற்கு அவர்‌ ஒருவரும்‌ மற்றவர்களின்‌ உழைப்பை வெறுமையாகக்‌ கொள்ளக்கூடாது என்று கூறினார்‌. உழைப்பவனுக்கு அவனுக்கு உரியவைகள்‌ ஒழுங்காகவும்‌, தாராளமாகவும்‌ கொடுக்கப்பட வேண்டும்‌. பாபா அறிவுறுத்திய இக்கொள்கை பின்பற்றப்பட்டால்‌, அதாவது உழைப்பிற்கான கூலி ஒழுங்காகவும்‌, திருப்திகரமாகவும்‌ அளிக்கப்பட்டால்‌ தொழிலாளர்கள்‌ இன்னும்‌ சிறப்பாக வேலை செய்வார்கள்‌. தொழிலாளர்களும்‌, முதலாளிகளும்‌ லாபமடைவார்கள்‌. இழுத்து மூடுவதற்கோ (Lock-out), வேலை நிறுத்தங்களுக்கோ இடமேயில்லை. தொழிலாளி, முதலாளி மனஸ்தாபமும்‌ இல்லை.

ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top