உறவுகள்வாழ்வியல்

எவ்வளவு பேசணும்? கதை…

அவர் மிகப்பெரிய பேச்சாளர். எந்த ஊரிலும் அவர் பேசுகிறார் என்பது தெரிந்தால், குறைந்தது பத்தாயிரம் பேராவது கூடி விடுவார்கள். அப்படிப்பட்டவர் ஒரு ஊருக்கு முதல்முறையாக பேசப் போனார். அவர் போன நேரம், திடீரென்று வானம் பொத்துக்கொண்டது போல பெரும் மழை. யாரும் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாது.

சிரமப்பட்டு இவர் மேடையை நெருங்கிப் பார்த்தால் எதிரில் கூட்டமே சுத்தமாக இல்லை. அந்த மழையிலும் ஒரே ஒருவர் மட்டும் தொப்பலாக நனைந்துகொண்டு வந்து காத்திருந்தார்.

பேச்சாளருக்கு பேசுகிற ஆர்வம் சுத்தமாக வடிந்துவிட்டது. “நான் பத்தாயிரம் பேருக்குக் குறைவா இருக்கிற கூட்டத்துல பேசினதே இல்லை. மீட்டிங்கை கேன்சல் பண்ணலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க” என்று அவரிடமே கேட்டார் பேச்சாளர்.

“நான் குதிரைக்கு கொள்ளு வைக்கிற வேலை செய்யுற சாதாரண ஆளு சாமி! உங்கள நேர்ல பார்க்கிறதே எனக்கு பெரிய பாக்கியம்  ஆனா எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். நூறு குதிரைக்குக் கொள்ளு வைக்க போன இடத்துல ஒரே ஒரு குதிரைதான் இருக்குதுன்னா, நான் சும்மா திரும்ப மாட்டேன். அந்த  குதிரைக்கு மட்டுமாவது கொள்ளு வச்சுட்டுத்தான் வருவேன்” என்று சொன்னார் அந்த அப்பாவி ஆசாமி.

பேச்சாளருக்குக் கண் கலங்கிவிட்டது.
” நீ என் அறிவுக்கண்ணை திறந்துட்டப்பா” என்று சொல்லிவிட்டு மைக்கைப் பிடித்தார். தான் அதுவரைக்கும் கற்று வைத்திருந்த எல்லா தத்துவங்கள், கதைகளையும் கலந்து பல மணி நேரம் அற்புதமாகப் பேசினார். அவருக்கே அதை நினைத்து மலைப்பாக இருந்தது.

பேசி முடித்து கீழே இறங்கி “என்னோட பேச்சு எப்படி இருந்துச்சு” என்று கேட்டார்.

“எனக்கு தெரிஞ்சதே சொல்றேன் சாமி. நீங்க நிறைய விஷயம் சொன்னீங்க. என்னால கொஞ்சம்தான் புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் ஒரு குதிரை இருந்தா அந்த ஒண்ணுக்குத்தான் கொள்ளு வெப்பேன். ஆர்வத்துல நூறு குதிரைக்கான கொள்ளையும் ஒரே குதிரைக்கு நிச்சயமாக வைக்க மாட்டேன்” என்று சொன்னாராம் குதிரைக்காரர்.

“தெரிந்த எல்லாவற்றையும் பேசாமல், தேவையான அளவு மட்டும் போசினால் உங்களை எல்லாருக்குமே பிடிக்கும்”.


நன்றி... 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *