செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதியதாக வருவாய் கோட்டம், வட்டங்கள்: அமைச்சர்கள், எம்எல்ஏகள் முதல்வரிடம் வலியுறுத்தல் | New revenue division, Taluks in Pudukkottai district: Ministers, MLAs urge Chief Minister

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய கோட்டம், வட்டங்கள் உருவாக்குமாறு அமைச்சர்கள், எம்எல்ஏகள் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் மாநாடு நடைபெற்றது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமயம் வட்டத்தில் உள்ள அரிமளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் பொன்னமராவதி வட்டத்தை இலுப்பூர் கோட்டாட்சியரிடம் இருந்து புதுக்கோட்டைக்கு மாற்ற வேண்டும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மனு அளித்தார்.

ஆலங்குடி வட்டத்தில் உள்ள கீரமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மனு அளித்துள்ளார். மேலும், ஆவுடையார்கோவில் வட்டத்தில் உள்ள ஏம்பலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் மனு அளித்துள்ளார்.

கந்தர்வக்கோட்டை, குளத்தூர் மற்றும் கறம்பக்குடி ஆகிய வட்டங்களை உள்ளடக்கி கந்தர்வக்கோட்டையில் புதிய கோட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை மனு அளித்துள்ளார்.

இதேபோன்று, கறம்பக்குடி வட்டத்தில் ரெகுநாதபுரம் மற்றும் வெட்டன்விடுதியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய குறுவட்டமும், கலியராயன்விடுதி கிராமத்தை மையமாகக்கொண்டு புதிய உள்வட்டம் ஏற்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழு உறுப்பினர் பட்டம்மாள் சத்தியமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *