ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி
கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்
கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்!
உயிரோவியம் வரைந்த உன் விரல்கள் ஓய்ந்து விட்டன
உன் ஓவியத்தால் பல பெண்கள் உயிர் பெற்றன!
கவிஞர் பலருக்கு உன் ஓவியமே பலம் சேர்த்தது
கண்ட உன் ஓவியங்களுக்கு கவிதை யாத்தவன் நான்!
பாராட்டில் பாதி உனக்கே சேர வேண்டும்
பார்த்த யாவரும் வியப்பில் ஆழ்வது உறுதி!
இவ்வளவு ஆற்றல் மிக்க ஓவிய இளையோனை
இவ்வளவு சீக்கிரம் இயற்கை பறித்துக் கொன்றது!
இராசா இரவிவர்மா ஓவியம் போலவே நம்மூர்
இராசாவாக வலம் வந்திட்ட ஓவியனே!
கோவிலில் நிற்கும் பெண் ஓவியம் கவனித்தால்
கன்னியின் நிற்கும் நிழலையும் வரைந்து இருப்பாய்!
ஆலயத்தின் உள்ளே மகளுக்கு பொட்டு வைக்கும்
அன்னையின் முகத்தில் பாசத்தையும் வரைந்து இருப்பாய்!
உன் ஓவியங்கள் போலவே உன் உருவமும் அழகு தான்
உன் உயிர் இவ்வளவு சீக்கிரமா பிரிய வேண்டும்!
உண்மையா? ஓவியமா? ஒரு நிமிடம் திகைத்திடுவேன்
உண்மையாக ஓவியங்கள் வரைந்த உன்னதன் நீ!
முகநூலில் உன் ஓவியமில்லா நாளே இல்லை
முகநூல் முழுவதும் நிறைந்தது ஆழ்ந்த இரங்கலால்!
இசைக்கு ஓர் இசைஞானி இளையராசா போல
இனிய ஓவியத்திற்கு ஓர் இளையராஜாவாக வலம் வந்தவனே!ஓவியங்களில் வாழ்வாய் என்றும்!