நெருப்பின் தாகம்!கவிஞர் இரா. இரவி
கும்பகோணத்தில் பிஞ்சுகளின் உயிர் குடித்தது
குரங்கணியில் பலரின் உயிர் குடித்தது!
பஞ்ச பூதங்களில் பயங்கரமான பூதம் நெருப்பு
பற்றி எரிந்தால் பிழைப்பது மிகக் கடினம!
தீ விபத்து என்பது கோர விபத்து
தீயுடன் கவனமாக இருப்பது நல்லது!
சுடராக இருக்கையில் ஒளியினைத் தரும்
சூறாவளிக் காற்றோடு இணைந்தால் அழித்து விடும்!
நெருப்பும் காற்றும் தீ நட்பு ஆகும்
நெருங்கியவர்களின் உயிரைப் பறித்து மகிழும்!
வாழை இலை ஆடை வெப்பம் தணிக்கும்
விபத்து நேர்ந்தால் வலியால் துடிப்பர்!
கொடிது கொடிது தீ மிகவும் கொடிது
கூட இருந்தே குழியைப் பறித்து விடும்!
உணவு சமைக்க உதவுவது மட்டுமல்ல
ஊர எரிக்கவும் உதவிடும் நெருப்பு!
குடிசைகள் பற்றிட மிகவும் பிரியம்
குடிசைவாசிகளைத் துன்புறுத்தி மகிழும்!
சிக்கு முக்கி கல்லை உரசிக் கண்டுபிடித்தான்
சிக்கலில் மாட்டி வாட்டி வதக்கி விடுகின்றது!
நெருப்புடா நெருங்கடா வசனம் பிரபலம்
நெருப்பிடம் நெருங்குவது மடமையன்றோ அறிந்திடுக!
மலையேறும் சுற்றுலா சென்றவர்களின் உயிரை
மனசாட்சியின்றிப் பறித்திட்ட நெருப்பே குற்றவாளி!
வனத்தில் வசிப்பவர்களால் வனம் எரிவதில்லை
வனம் காணச் செல்பவர்களால் வனம் எரிகிறது!
கட்டுக்குள் இருந்தால் நன்மை தரும் தீ
கட்டுக்கடங்காவிட்டால் காட்டையும் அழிக்கும் தீ
நெருப்பின் தாகம் என்றும் தீராத தாகம்
நெருப்பை நெருங்காமல் என்றும் தள்ளி வைப்போம்!
நன்றி கவிஞர் இரா.இரவி