வாழ்க்கையெனும் போர்க்களம்! கவிஞர் இரா. இரவி !
வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் உண்டு
வேதனை சோதனை துயரம் எல்லாம் உண்டு!
இழப்பு பேரிழப்பு இன்னல் எல்லாம் உண்டு
இன்பமும் அவ்வப்போது வாழ்வில் வந்து போகும்!
இன்பம் மட்டுமே நிரந்தரமானவர்கள் எவருமில்லை
இன்பத்துடன் துயரமும் கலந்தது தான் வாழ்க்கை!
போர்க்களத்தில் வெற்றி தோல்வி இரண்டும் உண்டு
போராட்டம் போன்றது தான் மனித வாழ்க்கையும்!
தோல்வி கண்டு துவண்டு விடுதல் கூடாது
தோல்விக்கும் பின் வெற்றியும் வருவது உண்டு!
ஒருமுறை முயன்றுவிட்டு விரக்தியடைதல் தவறு
மறுமுறை முயன்று வென்றுவிடலாம் நம்பு!
கவலைப்படுவதால் கவலை நீங்கி விடாது
கவலையை மறந்து கடமையை நிறைவேற்று!
மன்னர்களின் போரில் விதிமுறைகள் உண்டு
மனித வாழ்க்கைப் போரில் விதிமுறைகள் இல்லை!
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் வாழ்வில்
எதையும் எதிர்கொள்ளும் மனநிலை வேண்டும்!
நினைத்தபடி அமைவதல்ல நம் வாழ்க்கை
நினைக்காததும் வாழ்வில் திடீரென நடக்கும்!
மாற்றம் ஒன்று தாம் மாறாதது என்பது உண்மை
மாற்றம் வாழ்வில் வருவது உண்மை நம்பு!
இரவு இரவாகவே இருட்டாகவே இருப்பதில்லை
இரவு மாறி பகல் வரும் ஒளி பெறும்!
இன்னல் யாருக்கும் நிரந்தரமில்லை உணர்க
இன்னல் நீங்கி இன்பம் பிறக்கும் அறிக!
போர்க்கள வீரனின் கவனத்துடன் வாழ்க்கையில்
போராடி வெற்றி காண முயலுங்கள்!
வாழ்க்கையெனும் போர்க்களம் பாடம் தரும்
வளமான வாழ்வும் தரும் வீழ்ச்சியும் தரும்!
நன்றி
கவிஞர் இரா.இரவி