பிஞ்சு மனங்களும்! செல்ல மழையும்! கவிஞர் இரா. இரவி !
பிஞ்சு மனங்களும்! செல்ல மழையும்!
மழையில் நனைய வேண்டாம் என்று குழந்தைகளை
மனிதர்கள் தடுத்து நிறுத்தி விடுகின்றனர்!
மழையில் நனைந்து மகிழ்ந்திட குழந்தைகள்
மனம் ஏங்கி தவித்து வாடுகின்றன!
மழையில் நனைந்தால் காய்ச்சல் வருமென்று
மனம் போன போக்கில் தவறாகக் கற்பிக்கின்றனர்!
மழையில் ஆடி மகிழ்ந்தால் மனம் மகிழும்
மழையோடு விளையாடி உறவாடி மகிழும்!
குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி மகிழுங்கள்
கூட இருந்து கண்காணித்து நனைய விடுங்கள்!
குதூகலத்தில் குழந்தை தன்னை மறக்கும்
குதியாட்டம் போடும் சதிராட்டம் ஆடும்!
கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும் வராது
குழந்தைகளுக்கு மழையில் நனையும் மகிழ்ச்சி!
வேண்டாம் குடை மழைக்கானத் தடை
வேண்டும் மனம் விட்டால் வரும் இன்பம்!
வானிலிருந்து வரும் அமுதம் செல்ல மழை
வாஞ்சையோடு வரவேற்று மகிழட்டும் குழந்தைகள்!
கைபேசியிலும், கணினியிலும் விளையாடுவதை விட்டு
கழனியிலும், கட்டாந்தரையிலும் விளையாட விடுங்கள்!
வெளிஉலகம் தெரியாமல் வளர்க்காதீர்
வெளிஉலகம் காண மழையில் நனையட்டும்!
காகிதக்கப்பல் கத்திக்கப்பல் செய்து கொடுங்கள்
குழந்தைகள் கப்பலோட்டி மழையில் மகிழும்!
கப்பல் மூழ்கினால் மறுகப்பல் தாருங்கள்
குழந்தைகளின் மகிழ்ச்சியை அளவிட முடியாது!
பள்ளங்களில் விட்டுவிட வேண்டாம் அருகிலிருந்து
பள்ளமில்லா இடங்களில் விளையாட விடுங்கள்!
மழையில் நனையாதே என பயமுறுத்தாதீர்கள்
மழையில் நனைந்து வா என ஊக்கம் கொடுங்கள்!
பிஞ்சுமனங்கள் செல்ல மழையில் நனையட்டும்
பிரபஞ்சத்தில் பிறந்த மகிழ்வை கொண்டாடட்டும்!
நன்றி கவிஞர் இரா.இரவி