தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் இரா. இரவி.
உங்களுக்குள்ளே பேசிப் பாருங்கள் பேசுவது சரியா?
உலகம் ஏற்குமா? மறுக்குமா? என்றே சிந்தியுங்கள்!
மனசாட்சியோடு எதையும் பேசிப் பாருங்கள்
மனம் சொல்லும் இதைச் செய், இதைச் செய்யாதே என்று!
மனசாட்சியின் சொற்படி வாழ்ந்து வந்தால்
மனம் போல் வாழ்க்கை மகிழ்வாக அமையும்!
எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? சரியா?
என்றே உங்களுக்குள் நாளும் கேட்டுப் பாருங்கள்!
சரியென்று தோன்றினால் ஏற்று நடங்கள்
சரியன்று என்று தோன்றினால் தவிர்த்து விடுங்கள்!
உங்களுக்கு நீங்களே நீதியரசராக இருந்திடுங்கள்
ஒருபோதும் யாருக்கும் அநீதி இழைக்காதீர்கள்!
மேடைகளில் பேசப் போகும் முன்னே உங்கள்
மனத்தால் முதலில் பேசிப் பாருங்கள் நன்றாக!
ஒரு சொல் வெல்லும் ! ஒரு சொல் கொல்லும்
ஒருபோதும் கொல்லும் சொல் பேச வேண்டாம்!
பிறர் மனம் புண்படும்படி பேசவே வேண்டாம்
பிறர் மனம் பாராட்டும்படி பேசுவது நன்றாகும்!
உறவுகளிடம் பேசப் போகும் முன்னே முதலில்
உங்களுக்குள் பேசிப் பார்த்துச் செல்லுங்கள்!
நண்பர்களிடம் பேசப் போகும் முன்னே முதலில்
நன்றாகப் பேசிப் பார்த்துச் செல்லுங்கள்!
உயர் அலுவலரிடம் பேசப் போகும் முன்னே
உங்களுக்குள் பேசிப் பார்த்துச் செல்லுங்கள்!
பயன் இல்லாத சொற்களைப் பயன்படுத்தாதீர்
பயனுள்ள சொற்களை பயன்படுத்துக! வள்ளுவர் சொன்னபடி!
கேலி கிண்டல் செய்வதிலும் வரையறை உண்டு
கண்டபடி பேசி பகை வளர்க்காதிருக்க வேண்டும்!
கொட்டிய பொருட்களை அள்ளி விடலாம்
கொட்டிய சொற்களை திரும்பப் பெற முடியாது!
உங்களை நீங்கள் மதிப்பிட தனிமையோடு பேசுங்கள்
உங்களை நீங்கள் உயர்த்திட தனிமையோடு பேசுங்கள்!
நன்றி கவிஞர் இரா.இரவி