கவிதைகள்வாழ்வியல்

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்கு தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன்!

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *