அழகு ஒன்றுதான் காதலா? கவிஞர் காரை வீரையா!
அழகு ஒன்றுதான் காதலா
அவன் பெண் பார்க்கச் சென்றான். அவளின்அழகினை கண்டு மயங்கி இப்படி வர்ணிக்கிறான் முடிவில் என்ன ஆனது?
…… See more
கண்ணது கண்டேன்
கருந்திராட்சை இனி
காசுக்கு வாங்கிய மாட்டேன்!
கன்னமது கண்டேன்
முகம் பார்க்கும் கண்ணாடிப்
பக்கம் இனி சென்றிடமாட்டேன்!
உதட்டது கண்டேன் அசல்
அதிரசம் கேட்டு அம்மாவை இனி தொல்லை செய்திட மாட்டேன்!
நாசியது கண்டேன் இனி
எள்ளு பூவினை என்றும்
நுகர்ந்திட மாட்டேன்!
கருங்கூந்தலது கண்டேன் இனி அமாவாசை இருட்டினை கண்டு
பயப்பட மாட்டேன்!
சிரமது கண்டேன் இனி
ஓதுவாரிடம் சங்கு
இரவல் கேட்டிட மாட்டேன்!
கரமது கண்டேன் இனி
வாழைத் தண்டு பொறியலை
என்றும் தொட்டிட மாட்டேன்!
இடையது கண்டேன் இனி
உடுக்கை இழந்தவன் போல்
இருந்திட மாட்டேன்!
சடையது கண்டேன் இனியயென்
இடையினை பூட்டும் கருப்பு
பெல்டினை போட்டிட மாட்டேன்!
நடையது கண்டேன்- இனி
அன்னப் பறவை வீட்டில்
வளர்த்திட மாட்டேன்!
துடையது கண்டேன் இனி
அடுத்தவன் பெண்ணை
நிமிர்ந்து பார்த்திட மாட்டேன்!
மெய்யது கண்டேன் இனி
அத்தையாள் தரும் பஞ்சு
மெத்தைமேல் உறங்கிட மாட்டேன்!
பல்லது கண்டேன் இனி
பளிச்சிடும் மெர்குரி விளக்கினை
வீட்டில் ஏற்றிட மாட்டேன்!
முடிவினில் அவளது
சொல்வது கேட்க ஆவலாய்
யென் கண்களைச் சிமிட்டி
பேசப் பணித்தேன்!
அவள் பேசினாள்
அரைமணி நேரம்
அணுஅணுவாய்
அழகினை ரசித்துவிட்டு
பேசச் சொல்கிறாய்
இது நியாயமா?
அழகு ஒன்றுதான்
காதலென்று உனது
கண்கள் பேசியது போதும்!
அன்பு இல்லாவரிடம்
ஆயுள் முழுவதும் நான்
எப்படி வாழ்வது?
சாட்டையால் அடித்தது போல்
அடித்துச் சொல்லிவிட்டாள்!
“காரை வீரையாவின் 2019” இது சரவெடி அல்ல சாட்டை அடி “கவிதைகள் நூலிலிருந்து…
நன்றி கவிஞர் இரா.இரவி