காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது – சென்னையில் வரலாறு காணத மழை பதிவு சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது
சென்னை : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக கரையைக் கடந்து வருவதாக வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் நவம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களிலேயே வரலாறு காணாத மழை பெய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கி விட்டதாக கூறினார். சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்ட வேகத்தில் வீசக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்கள் கடலோரங்களுக்கு வர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆபத்தை உணராமல் பலரும் கடற்கரையில் குவிந்து வருகின்றனர் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த காரணத்தால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை நெருங்கிய பின் தொடர்ந்து வலுவிழக்கும் இதனால் தமிழ்நாடு ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிபடியாக குறைய தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே 70.9 செ.மீ. மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நவம்பர் மாதத்தில் 100 செ.மீ.க்கு அதிகமான மழை 1918, 1985, 2005, 2015 ஆகிய 4 ஆண்டுகளில் மட்டுமே பெய்துள்ளது.1918ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 செ.மீ. மழை பெய்தது தான் சாதனையாக இருந்தது. கடந்த 2005ஆம் ஆண்டில்107.8 செ.மீ.யும், 2015ஆம் ஆண்டில் 104.9 செ.மீ. அளவு நவம்பரில் சென்னையில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவதற்கு இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே 70.9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எஞ்சியுள்ள 19 நாட்களில் நிச்சயம் மழைப்பொழிவு 38 செ.மீ.க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.