கவிதைகள்வாழ்வியல்

சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !

இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டு
இரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் !
காமராசர் கக்கன் போன்ற நேர்மையாளர்கள்
கரங்களில் நாட்டின் நிர்வாகம் வரவேண்டும் !
சின்னமீனைப் போட்டு சுறாமீனை விழுங்கும்
சின்னப் புத்திக்காரர்கள் ஒழிய வேண்டும் !
நீதி நேர்மை நியாயம் எங்கும் எப்போதும்
நிரந்தரமாக மக்களிடையே நிலவ வேண்டும் !
நாடு முழுவதும் மதுக்கடைகளும் ஆலைகளும்
நிரந்தரமாக உடனடியாக மூடிவிட வேண்டும் !
வெண்சுருட்டு உற்பத்திக்குத் தடை வேண்டும்
வெண்சுருட்டு கிடைக்காத நிலை வேண்டும் !
ஆணாதிக்க சிந்தனை அடியோடு அழிய வேண்டும்
ஆணிற்கு நிகர் பெண் என்பதை உணர வேண்டும் !
இலஞ்சம் உள்ள நாட்டில் இல்லாது ஒழிய வேண்டும்
இலட்சிய தாகத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும் !
ஒழுக்கம் உயிர்க்கு மேலாக மதித்திட வேண்டும்
ஒழுக்கக்கேடு எங்கும் இல்லாமல் ஒழிய வேண்டும் !
சாதி சமய வேற்றுமைகள் இல்லாது ஒழிய வேண்டும்
சகோதர உணர்வுடன் சங்கமிக்க வேண்டும் !
மூட நம்பிக்கை நாட்டில் முற்றாக ஒழிய வேண்டும்
மூளையைப் பகுத்தறிவிற்கும் பயன்படுத்த வேண்டும் !
கல்வித்துறை முழுவதும் அரசுடைமையாக வேண்டும்
கல்வித்துறையில் தனியாரை அகற்றிட வேண்டும் !
அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்திட வேண்டும்
அனைவருக்கும் கல்வியை அரசே வழங்கிட வேண்டும் !
ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை வர வேண்டும்
எல்லாமும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் !
உழைப்பை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும்
உழைக்காதோர் இல்லை என்ற நிலை வர வேண்டும் !

நன்றி
கவிஞர் இரா இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *