புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிபொருள் பரிசோதனைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள ஜல்லி, மண்ணை அரசின் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியரிடம் ஓஎன்ஜிசி நிர்வாகம் இசைவுக் கடிதம் அளித்துள்ளது.
கறம்பக்குடி மற்றும் ஆலங்குடி வட்டத்தில் 7 இடங்களில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தலா சுமார் 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகளை ஓஎன்ஜிசி அமைத்தது. அதில், எரிபொருள் எடுக்கும் வகையிலான வால்வுகளை 3 இடங்களில் பொருத்தியது. மற்ற இடங்கள் தரையோடு மூடப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் எரிபொருள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை அகற்றிவிட்டு, அதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் அவ்வப்போது வந்து ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வு செய்தனர். கடந்த மாதம் வாணக்கன்காட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றை ஆய்வு செய்த அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன என்றும், படிப்படியாக அனைத்துக் கிணறுகளும் மூடப்பட்டு, நிலங்கள் உரிய விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி நிலம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கறம்பக்குடி வட்டம் கோட்டைக்காடு மற்றும் புதுப்பட்டி ஆகிய 2 இடங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை அகற்றிவிட்டு, நிலங்களை உரியவரிடமே ஒப்படைக்கப்பட உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள ரூ.85 லட்சம் மதிப்பிலான ஜல்லி, மண்ணை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளளாம் என ஆட்சியர் கவிதா ராமுவிடம் ஓஎன்ஜிசி பொது மேலாளர் சாய்பிரசாத், பொதுமேலாளர் (சிவில்) ரவி, துணை பொது மேலாளர் (மனிதவளம்) ஜோசப்ராஜ், வட்டாட்சியர் தமிமுன் அன்சாரி ஆகியோர் அளித்தனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டது.

இதுகுறித்து ஓஎன்ஜிசி அலுவலர்கள் கூறியபோது, “வழக்கமாக இதுபோன்று கிணறுகளை மூடும்போது, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு முன்பாகக் கையகப்படுத்தும்போது நிலம் எப்படி இருந்ததோ அதே நிலையிலேயே நிலத்தை உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கப்படும். அதற்காக, அங்கு கொட்டப்பட்ட மண், ஜல்லிகளை அகற்றி ஓஎன்ஜிசி நிர்வாகமே பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.
ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் கனமீட்டர் அளவில் உள்ள ஜல்லி, மண்ணை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியரிடம் ஓஎன்ஜிசி நிர்வாகம் சார்பில் இசைவுக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982