துளிப்பாக்கள் – கவிஞர் பாரியன்பன் நாகராஜன்
துளிப்பாக்கள்
உயிர்ப் பிரிதல் மட்டுமல்ல
மனசு இறப்பது கூட
மரணம்தான்.
மேலெழும் அனைத்தையும்
தன்வசப்படுத்துகிறது
ஈர்ப்புவிசையால் பூமி.
ஒட்டு மொத்த மரத்தையும்
தன் வசம் கொண்டிருக்கிறது
வேர்கள்.
எரியும் மெழுகுவர்த்தி
நின்று எதிர்க்கிறது
பெரும் இருட்டை.
புல்லில் பூத்த
ஒற்றைப் பனித்துளியில் புள்ளியாய்த் தெரிகிறது பிரபஞ்சம்.
சப்தமின்றி
பொழிகிறது
பனியும் சாரலும்.
உயிர் பிரிதலும்
சுடர் அணைதலும்
காணக்கொடுமை.
சாகாவரம் கேட்கும்
அனைவருக்கும் இறைவனால்
சாகும் வரமே அருளப் படுகிறது.
எந்தச் சொற்கள் வரிகளில்
விழுகின்றனவோ அந்தச் சொற்களே
கவிதையின் விருப்ப வரிகள்.
நாக்கை வெளியே நீட்டிபடி
சட்டைப் பையில் திணித்த பேனா
ரத்தம் கக்கிச் சாகிறது.
மழை ஓய்ந்ததும் மகிழ்ச்சியில்
ஆனந்தக் கண்ணீர்
வடிக்கின்றன மரங்கள்.
விலையாக வேண்டுமெனில்
உடல் பருத்தே ஆகவேண்டும்
பலூன்கள்.
நன்றி
கவிதை ஆக்கம்
பாரியன்பன் நாகராஜன்