சமூகம்செய்திகள்டிரெண்டிங்மற்றவைகள்

காய்கறி புலாவ் சோறு சாப்பிட்ட இறையன்பு ஐ.ஏ.எஸ். பணியாளர்களுக்கு அறிவுரை!

குழந்தைகள் மையப் பணியாளர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., அறிவுரை வழங்கியுள்ளார்

  • குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும்
  • சமையலறை மற்றும் பொருட்களின் பராமரிப்பு குறித்தும் ஆய்வு
  • காய்கறி புலாவ் சாதத்தினை உண்டு அதன் தரத்தினை தலைமை செயலாளர் இறையன்பு சரிபார்த்தார்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி, மைலாப்பூரில் திட்டம் 3 மற்றும் திட்டம் 11ல் செயல்படும் துவாரகா நகர், மெக்காபுரம், மற்றும் மைலாப்பூர் பஜார் சாலை ஆகிய இடங்களில் உள்ள மூன்று குழந்தைகள் மையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, குழந்தைகள் மையங்களில் வழங்கப்படும் முட்டையுடன் கூடிய சூடான மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை அவர் பார்வையிட்டார். மேலும், இன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி புலாவ் சாதத்தினை உண்டு அதன் தரத்தினை தலைமை செயலாளர் இறையன்பு சரிபார்த்தார்.

குழந்தைகளுடன் உரையாடி, மையத்தில் வழங்கப்படும் முன்பருவக் கல்வி குறித்தும் கேட்டறிந்த அவர், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, தன் சுத்தம் ஆகியவற்றுடன் குழந்தைகள் மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகள் மையத்தின் உணவுப் பொருள் இருப்பு அறை, சமையலறை மற்றும் பொருட்களின் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாவட்டத்தில் 1806 குழந்தைகள் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 87,322 குழந்தைகள், 13,466 கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் 10,388 பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 1,11,176 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். 01.09.2021 முதல் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இம்மையங்களில், கொரோனா பெருந்தொற்றினை தவிர்த்திடும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மையங்களில் கடைபிடிக்கவும், குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்கவும் ஆய்வின் போது தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார். மேலும், குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் எனவும் குழந்தைகள் மையப் பணியாளர்களுக்கு அப்போது அவர் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *