உயர் நீதிமன்றம் சொல்வது என்ன?தாலியை மனைவி கழற்றலாமா ?
கணவரை பிரிந்து வாழும் மனைவி, தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்தான் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர், தனக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அரசு ஆசிரியரான தனது மனைவி மனரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரியும் கணவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் சவுந்தர் அமர்வு, பணியிடத்துக்கு சென்று கணவரைப் பற்றி அவதூறு பரப்பியது மனரீதியில் துன்புறுத்துவதற்கு சமம் எனத் தெரிவித்தது.
மேலும், வழக்கு விசாரணையின் போது, கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என கூறி, கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.
தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில் அவரை பிரிந்ததும், தாலிச் சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.