புதுக்கோட்டை மாவட்டம் வல்லவாரியில் திடீரென பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்ததையடுத்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், வடகாடு, அறந்தாங்கி, வல்லவாரி, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக நேற்று (ஏப்.12) மழை பெய்தது. ஜனவரியில் பெய்த வட கிழக்குப் பருவ மழைக்குப் பிறகு மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது பெய்த மழையினால் உஷ்ணம் குறைந்துள்ளது. வாடிய பயிர்களும் தளிர்த்தன.
இதற்கிடையே அறந்தாங்கி அருகே வல்லவாரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கோடை மழையால் நெல் மூட்டைகள் முற்றிலுமாக நனைந்து வீணாகின. சில மூட்டைகளின் சாக்குகள் கிழிந்திருந்ததால் அதன் வழியே மழை நீர் உட்புகுந்தது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து சேமிப்புக் கிடங்குகளுக்கு அலுவலர்கள் கொண்டு செல்லாததே இதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதுபோன்று நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அரசுக் கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982