செய்திகள்நம்மஊர்

எம்எல்ஏக்களைத் தூக்கிச் சென்று பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கொடுத்துதான் பழனிசாமி முதல்வரானார்: திருநாவுக்கரசர் விமர்சனம் | Palanisamy became Chief Minister by giving money to MLAs and gold in kilos: S.Thirunavukarasar

எம்எல்ஏக்களைத் தூக்கிச் சென்று பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கொடுத்துதான் பழனிசாமி முதல்வரானார் என்று திருச்சி எம்.பி., சு.திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.முத்துராஜாவை ஆதரித்து புதுக்கோட்டையில் இன்று (ஏப்.4) சு.திருநாவுக்கரசர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”எம்எல்ஏக்களைத் தூக்கிச் சென்று, பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கொடுத்துதான் பழனிசாமி முதல்வரானார். தற்போது அப்படியெல்லாம் எதையும் செய்ய முடியாது. மக்களின் ஆதரவு இருந்தால்தான் முதல்வராக முடியும்.

பாஜகவோடு கூட்டணி வைத்ததால் நஷ்டம்தான் என அதிமுகவில் சாதாரண தொண்டருக்கே தெரிந்திருப்பது, பழனிசாமிக்குத் தெரியாமல் இருக்காது. அதிமுகவினரின் மடியில் கனம் உள்ளது. தேர்தலை நோக்கிச் செல்லும் வழியில் பயம் உள்ளது. பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என நிர்பந்தமும், கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பலவீனமாகிவிட்டது. அதிலும், தற்போது இரட்டைத் தலைமையுடன் அக்கட்சி செயல்படுவதும், சசிகலா, தினகரன் தலைமையில் மற்றொரு அணி செயல்படுவதும் அதிமுகவுக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அரசானது பாஜகவின் கீழ் கொத்தடிமை அரசாகவும், ஊழல் அரசாகவுமே இருந்து காலத்தைக் கழித்திருப்பது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியோடு போட்டியிட அதிமுகவே திண்டாடி வரும் நிலையில், முதல்வர் வேட்பாளர்களாகக் களமிறங்கி உள்ள தினகரன், சீமான், கமல்ஹாசன் போன்றவர்களால் எதுவும் செய்ய முடியாது”.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.



நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *