காய்கறி விலை உயர்வு | அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு | Increase in vegetable prices Demonstration across Tamil Nadu on behalf of AIADMK
சென்னை: காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும், இவற்றை கண்டும் காணாமல் இருந்துவரும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், அதிமுக சார்பில் 20-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்கள் என கட்சிரீதியிலான மொத்தம் 8 மாவட்டங்கள் சார்பில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையில், கட்சியின் மூத்த தலைவர் சி.பொன்னையன் தலைமையில், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங் கேற்றனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதிராஜாராம், விருகை ரவி, கே.பி.கந்தன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டோர் தக்காளி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை மாலையாக அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள இதர 38 மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், புதுக்கோட்டையில் சி.விஜயபாஸ்கர், காஞ்சிபுரத்தில் சோமசுந்தரம், திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலில் பா.பென்ஜமின், திருநெல்வேலியில் தச்சை கணேசராஜா, தருமபுரியில் கே.பி.அன்பழகன், ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பி.தங்கமணி, விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி, மதுரையில் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தலைமையிலும்,
திண்டுக்கல்லில் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ராணிப்பேட்டையில் அரக்கோணம் ரவி, பெரம்பலூரில் செம்மலை, கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம், சேலத்தில் பா.வளர்மதி, தேனியில் எஸ்.கோகுல இந்திரா, தஞ்சாவூரில் ப.மோகன், திருச்சியில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ச.கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.