செய்திகள்நம்மஊர்

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு | Teachers must monitor behavior inside and outside of the school: High Court order

மதுரை: ‘ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஏ.முத்து. இவர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த 2004-ம் ஆண்டு முதல், பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்க கோரி முத்து அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 2019-ல் நிராகரித்தார். அவரது உத்தரவை ரத்து செய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக்கோரி முத்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர். 7 நாளில் மொத்தமுள்ள 168 மணி நேரத்தில் 14 மணி நேரம் மட்டும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மக்கள் வரிப்பணித்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கவுரமான ஊதியம் பெறும் ஆசிரியர்களின் பொறுப்பும், கடமையும் தனியார் நிறுவன ஊழியர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிமாக இருக்க வேண்டும்.

ஆசிரியர் தொழில் புனிதமானது. ஆசிரியர்கள் நல்ல நடத்தை கொண்டவராக இருக்க வேண்டும். தற்போது ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற ஆசிரியர்களின் நடத்தையை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர்களின் நடத்தைகளை பள்ளிக்கு உள்ளேயும், பள்ளிக்கு வெளியேயும் உரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எனவே, தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளார். ஆனால் 2004-ல் இருந்து பணி வரன்முறை செய்யக் கோரி 2019-ல் தான் மனு அளித்துள்ளார். மேலும் மனுதாரர் 2004-ல் பணி நியமன விதிப்படி பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *